இப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதுபுது படங்களை ஒளிபரப்பி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை படத்தின் செலவில் பெரும்பகுதி அல்லது மொத்தச் செலவையும்கூட தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையிலேயே கிடைத்துவிடும் என்கிற நிலை இருந்தது. அதனால் இதனை நம்பி பல படங்கள் வெளிவரத் தொடங்கின.
தொலைக்காட்சிகளின் விளம்பர நேரத்தைக் குறைத்தபிறகு படங்கள் வாங்குவதை எல்லாத் தொலைக்காட்சிகளும் குறைத்துக்கொண்டன அல்லது விட்டுவிட்டன. இரண்டு கோடி மூன்று கோடி என்று விலை பேசப்பட்ட படங்கள் தற்போது இருபது இலட்சம், முப்பது இலட்சத்திற்கு வாங்கப்படுகின்றன. இதுபோன்ற படங்களை வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் அவசரத்தைப் புரிந்து மேலும் விலையைக் குறைத்து வாங்கி வைத்துக்கொண்டு பின்பு அதிகவிலைக்கு விற்பதும் ஆங்கங்கே நடக்கத்தான் செய்கின்றன.
இந்தச் சிக்கல் எல்லாம் ஒட்டாத படங்களுக்கு மட்டும் தான். ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டால் அதன் நிலை வேறு. அண்மையில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நானும்ரவுடிதான் படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் மூன்றரை கோடி வரை தரத்தயாராக இருக்கிறதாம் தனியார் தொலைக்காட்சிகள், ஆனால் அவர்கள் தருவதாகச் சொல்லும் விலையைவிட அதிகமாக எதிர்பார்க்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இதனால் அந்த வியாபாரம் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறதென்கிறார்கள்.
|