LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம் - நாராயண துரைக்கண்ணு

பிறப்பின் அருமை பெருமைகளைச் சற்றும் உணராது, புகழீட்டவும் முனையாது, வாழும் முறைமையினை நன்கறிந்து வாழ்ந்திட முற்படாதது மட்டுமின்றி, அறிவார்ந்த மக்களைப் பெற்றும், ஒழுக்கத்தின் வழி நின்று ஒப்புரவு ஓம்பியும், தீமையான பழக்க வழக்கங்களினின்று தம்மைத் தவிர்த்தும் வாழ்ந்திட முனையாது, பிழைப்பினைக் கருதி, சிறுமையுற வாழ்ந்திடும் மக்களினம் தடுமாறிவிடும் நிலை மாறிட, வள்ளுவம் இக்காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் துணை நின்றிடல் வெளிப்படை.

 

வாழ்வாங்கு வாழ்தல்

 

வாழ்ந்திட உரிய நெறிமுறைகளினின்று பிறழ்ந்திடாது, வாழும் முறைமையினை நன்கறிந்து, மேன்மையுற வாழ்ந்திடுவோர் தெய்வத்திற்கு ஒப்பாக வைத்து மதிக்கப்படுவர் என்று குறள் கூறுவதிலிருந்து பிறப்பின் பயனுடைய புகழினை எய்திடல் வேண்டும் என்பது வள்ளுவரின் விழைவும், வேட்கையுமாகும் என்பதை நன்கு உணரலாம். இக் கருத்தினையே,

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

 

தெய்வத்துள் வைக்கப் படும்

 

என்ற குறளின் மூலம் தெளிவுற அறியலாம்.

 

அறிவார்ந்த மக்கட்பேறு

 

சமுதாயம் நாளும் அறிவின் வயப்பட்டு, முன்னேறுதல் வேண்டும் என்ற பேரவாவினைக் கொண்ட வள்ளுவப் பெருந்தகை,

 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

 

மன்னுயிர்க் கெல்லாம் இனிது

 

என்ற குறளின் மூலம் தம்மைக் காட்டிலும் தம்முடைய மக்கள் அறிவில் மேம்பட்டு விளங்கிடல் வேண்டும் என்று தெளிவுறத் தெரிவித்துள்ளார்.

 

ஒழுக்கத்தின் உயர்வு

 

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

 

இழிந்த பிறப்பாய் விடும்

 

என்ற குறளின் மூலம் சமுதாயம் ஒழுக்கத்தின் வழி நடை பயின்று, பிறப்பிற்குப் பெருமை வந்து எய்துமாறு வாழ்ந்திடல் வேண்டும் என்பதுடன், அவ்வொழுக்கமே உடைமையாகும் என்று கூறுவதிலிருந்தும், ஒழுக்கத்தினின்று பிறழ்ந்தால், பிறப்பே இழிவாகும் என்று உறுதிபடக் கூறுவதிலிருந்தும் வள்ளுவம் ஒழுக்கமுள்ள சமுதாயத்தையே பெரிதும் விரும்பியது என்பதை அறியலாம்.

 

ஒப்புரவு கொண்டொழுகுதல்

 

சமுதாயம் உயர்ந்தோங்க வேண்டுமெனில், ஒருவருக்கொருவர் உதவிடும் நற்பண்பு கொண்டோராய் ஒழுகுதல் வேண்டும். உதவிடும் நற்பண்பால் துன்பமே வரினும் அதற்கெனத் தன்னையே விலையாகக் கொடுக்கவும் தயங்காது முன் வருதல் வேண்டும் என்பதை,

 

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

 

விற்றுக்கோள் தக்க துடைத்து

 

என்பதை மேற்கூறும் குறள்வழி வள்ளுவம் வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். தன்னுயிர் போல் பிற உயிர்களையும் எண்ணிக் கருணை கொண்டு ஒழுகுபவன் எஞ்ஞான்றும் துன்பம் உறுதலில்லை என்பதை,

 

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப

 

தன்னுயிர் அஞ்சும் வினை

 

என்ற குறளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

புகழ் பெற வாழ்தல்

 

நிலையாக எதனையும் தன்னகத்தே கொண்டு இயங்காத உலகத்தில் புகழ் ஒன்றே நிலைத்து நிற்கும் பேராற்றலை யுடையது என்பதை உணர்ந்து, புகழீட்டிப் பெருமையுற வாழ்ந்திட முனைதல் வேண்டும்.

 

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்

 

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்

 

என்ற புறநானூற்றுக்கு வலிவு சேர்க்குமாறு அமைந்துள்ள

 

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

 

பொன்றாது நிற்பதொன்று இல்

 

என்ற வள்ளுவத்தினை எண்ணிப் புகழீட்டி வாழ்ந்திட முனைதல் வேண்டும். மேலும், தூய மனத்தினை உடையவராய் மனித இனத்தின் வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாது இம் மன்னுயிரைக் காப்பது போன்று ஒழுகுதல் என்ற மாண்பு அமையுமானால் அஃது அனைத்து வகைப் புகழையெல்லாம் அளிக்கவல்லது என்பதையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

 

தீய பழக்க வழக்கங்களினின்று விடுபடல்

 

இளமையும், வளமையும் கொண்ட இன்றையச் சமுதாயம் பெரிதும் ஒழுக்கத்தினின்று பிறழ்ந்து காணப்படுதல் கண்கூடு. மதியினை மயக்கும் மதுவினைத் தொடர்ந்து அருந்துவது என்பது உயிரை மாய்த்துக் கொள்ளச் சிறிது சிறிதாக நஞ்சினை உண்பதற்கு ஒப்பாகும் என்று பொதுவாகக் கூறிய வள்ளுவம் அதை மீறி உண்ணத் தலைப்பட்டால் ஒழுக்கமுடைய அறிஞர்களால் அவர்கள் எண்ணப்படாத வராகும் நிலை ஏற்படும் என்றும் கீழ்க்காணும் தம் குறள்களால் உறுதிபட உணர்த்துவதைக் காணலாம்.

 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

 

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

 

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

 

எண்ணப் படவேண்டா தார்

 

சிறுமை பல எய்துமாறு செய்வதுடன் புகழினை அழித்து, வறுமை எய்திடச் செய்யும் சூதினை அறவே தவிர்த்திடல் வேண்டும் என்பதை,

 

சிறுமை பலசெய்து žரழிக்கும் சூதின்

 

வறுமை தருவதொன்று இல்

 

என்ற குறளின் மூலம் நன்கறியலாம். உடலுறவில் நாட்டம் உள்ளது போல், பொய்யுறக் கூடி பழகும் பொருட் பெண்டிருடன் இன்பம் துய்த்தல் என்பது உறவற்ற பிணத்தினை இருட்டறையில் தழுவுவதற்கு ஒப்பாகும் இதை,

 

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

 

ஏதில் பிணந்தழீஇ யற்று

 

என்ற குறளின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ஒழுக்கத்தினை உயிராக எண்ணி, மானிட வாழ்வியலைப் பெரிதும் நெறிப்படுத்தக் கடுமையாகக் கூறும் வள்ளுவத்தின் உயர்வினை எண்ணியெண்ணி இறும்பூதெய்தலாம்.

 

மாண்புடைய மக்களரசு

 

ஆட்சி புரிவோர் எதன் பொருட்டும் அஞ்சாத துணிவுடன் இலங்கியும், வறுமையினைக் கண்டு மனமிரங்கி, இன்னார், இனியர் என்று பாராது, எல்லார்க்கும் உதவிடும் ஈகைப் பண்பு கொண்டொழுகியும், அறிவுடைமையுடன் ஊக்கமுடைமை கொண்டும் விளங்கிடுதல் வேண்டும். அத்துடன் நில்லாது, மக்களுக்கு நலம் பயக்கும் பன்னெடுங்காலத் திட்டங்களை வகுத்து, அதற்கான பொருளை நேரிய வழியில் ஈட்டிக் குறைவு நேர்ந்திடா வண்ணம் காத்து, உரிய வழிவகையறிந்து, முறைப்படி செலவீடு செய்து, அரசினை நல்லரசாகவும், வல்லரசாகவும் இயக்குதல் வேண்டும் என்பதையும் கூறிட முனைந்தது. வள்ளுவம் நல்லாட்சியின் அமைதிக்குக் குந்தகம் நேரும் வண்ணம் மிகக் கொடிய குற்றம் புரிவோரைக் கொலைத் தண்டனை மூலமும் தண்டித்துச் சமுதாய நலத்தைக் காக்க வேண்டும் என்பதையும் நமது பல்வேறு அதிகாரங்களில் அறுதியிட்டு உறுதிபடக் கூறுவதைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

 

பொருளீட்டலில் மிகவும் நாட்டம் கொண்டு, பொய்ம்மையுற வாழும் இன்றைய மானிடம் வாழ்வாங்கு வாழ்ந்து, அறிவார்ந்த நன் மக்களை ஈன்று, ஒப்புரவு கொண்டொழுகி, தீமை பயத்தலான பழக்கங்களைத் தவிர்த்து ஒழுக்கத்தின் வழிநின்று, புகழீட்டி வாழ்தல் வேண்டும் என்றும், மாண்புடைய மக்களைக் காக்கும் அரசு வளமான நலன்களை நல்குமாறு அமைவதுடன் கொடுமைகளைக் களைந்து, அஞ்சுதலின்றி, அறிவுடைமையுடனும், ஊக்கமுடைமையுடனும் செயல்படுதல் வேண்டும் என்றும் நிலைத்த அறத்தினையே பேசுவதால், ''வள்ளுவம்'' இக்காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் துணையாக நிற்கும் என்பதை இச்சமுதாயம் ஐயத்திற்கு ஒரு சிறிதும் இடமின்றி அறிந்து, தெளிந்து, ஒரு தலையாக வள்ளுவத்தைப் போற்றி அதன் வழி வாழ்ந்து, ''மண் பயனுற வேண்டும்'' என்ற கருத்தினை அகத்தினில் கொண்டு புகழொடு வாழத் தலைப்படுதல் வேண்டும்.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.