நடிகர் சிவகார்த்திகேயன் காக்கிச் சட்டை படத்தை தொடர்ந்து, ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரியும் சேர்ந்து நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படத்தில் டீக்கடை உரிமையாளராக நடிக்கிறாராம்.
இவர் தன்னுடைய டீக்கடை திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்து ஒட்டியது போன்று ஒரு காட்சியை சமீபத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சூரி, சிவகார்த்திகேயன் இருவரும் தனித்தனியாக குனிந்து கும்பிடுவதுபோல் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன்-சூரி-பொன்ராம் மூன்று பேரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் என்பதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது.
|