LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1220 - கற்பியல்

Next Kural >

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.)
மணக்குடவர் உரை:
இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
இவ்வூரவர் நனவினால் நந்நீத்தார் என்பர் - இவ்வூர் மகளிர் நனவின்கண் நம் காதலர் நம்மைக் கைவிட்டாரென்று கொடுமை கூறுவர்; கனவினாற் காணார் - ஆனால், அவர் கனவின் கண் தப்பாது வருதலை என்போலக் கண்டறியார். தன்னொடு தோழிக்குப் பிறசெய்திகளிற் கருத்து வேற்றுமை யின்றேனும், அவள் தலைமகனைப் பழித்தலைச் சற்றும் பொறாளாதலின், 'இவ்வூரவர்' என அயன்மைப்படுத்திக் கூறினாள். 'கொல்' அசைநிலை. மூன்றனுருபுகள் முற்கூறியனவே.
கலைஞர் உரை:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.
சாலமன் பாப்பையா உரை:
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இப்படி என் காதலரை நான் அடிக்கடி கனவில் சந்தித்து இன்பமடைவதை அறியாத ஊரார் என் காதலர் வரவேயில்லை யென்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.) என் காதலர் என்னைவிட்டுப் பிரிந்திருப்பதை ஏளனம் செய்கிற இந்த ஊரார், நானும் அவரும் கனவில் கலந்து மகிழ்வதைத் தாங்களும் கனவில் காண்பார்களானால் இப்படி ஏளனம் செய்யமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இவ்வூர் மகளிர் நனவிலே நம்மைவிட்டுப் போனார் என்று நம் காதலரைக் கொடுமை கூறுகிறார்கள். அவர் கனவில் நீங்காது வருவதனைக் கண்டறியாரோ?.
Translation
They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town.
Explanation
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.
Transliteration
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal Kaanaarkol Ivvoo Ravar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >