அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த, நீனா டேவுலுரி, "மிஸ் அமெரிக்கா' அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
"மிஸ் அமெரிக்கா 2014" அழகிப் போட்டி நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அட்லான்டிக் நகரில் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 53 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஏற்கனவே, "மிஸ் நியூயார்க்' பட்டத்தை வென்ற, நீனா டேவுலுரி, கலந்து கொண்டார். ஆடை அலங்காரம், லைப் ஸ்டைல், திறமை, நேர்க்காணல் உட்பட பல பிரிவுகளில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நியூயார்க் அழகி நீனாவிடம், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கண் அமைந்திருக்கும் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது தோற்றத்தை மாற்றம் செய்தது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நீனா, ‘‘பிளாஸ்டிக் சர்ஜரியில் தனக்கு உடன்பாடில்லை என கருத்து தெரிவித்த நீனா, ஒருவர் தனது சொந்த தோற்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’’ என பதில் அளித்தார். திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் பாலிவுட் ஸ்டைல் நடனம் ஆடி நடுவர்களை கவர்ந்தார். போட்டியின் இறுதியில், மிஸ் அமெரிக்காவாக நீனா தேர்ந்தெடுக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார்.
|