LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு 26/03/2024 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60.

 

விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை ‘லொள்ளு சபா’ சேஷு என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

 

தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

 

கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

 

அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலவசத் திருமணம், கல்வி, மருத்துவத்துக்காகப் பலருக்கும் சேஷு நிதியுதவி வழங்கியதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

அவரின் திரையுலக பயணம்

 

“நான் யாருன்னு என்ன கேக்குறத விட, வேற யார்கிட்டயாவது போய் அவர் யாருன்னு கேட்டு பாரு... அச்சச்சோ அவரா, பயங்கரமான ஆளாச்சே, அப்டின்னு சொல்லுவா” என ‘ஏ1’ படத்தில் சேஷு பேசிய வசனம் இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறைக்கும் அவரை கொண்டு சேர்த்தது. அதிலும் அந்த வாழைப்பழத்தைக் கத்தியாகப் பயன்படுத்தும் காமெடி அல்டிமேட் ரகம். போலவே, “கொசுக்கடியில்லாமல் தூங்குங்க அத்திம்பேர்” என மொத்தப் படத்திலும் நகைச்சுவையில் மிரட்டியிருப்பார் சேஷு. குறிப்பாக அண்மையில் அவர் நடித்த சில கதாபாத்திரங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்.

 

விஜய் டிவியில் கடந்த 2003 - 2008 வரை ஒலிபரப்பான ‘லொள்ளு சபா’வின் மூலம் நடிகராக முத்திரை பதித்தவர் சேஷு. குறிப்பாக ‘மண் வாசனை’ படத்தை ‘மசாலா வாசனை’ என்ற பெயரில் ‘லொள்ளு சபா’வில் ஸ்பூஃப் செய்திருந்தனர். அதில் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சேஷு, “மண்ணென்ன வேப்பன்ன வெளக்கெண்ண யார் ஜெயிச்சா எனக்கென்ன”, “பொட்டுக்கடல, வேர்கடல, நிலக்கடல நீ சொன்னதுக்கு சிரிப்பே வரல” போன்ற வசனங்களின் மாடுலேஷன் இன்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ட்ரெண்டிங். அதேபோல ரஜினியின் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் ஸ்பூஃப் வீடியோவில், தம்பி கதாபாத்திரத்தின் கெட்டப்பில் ரசிக்க வைத்திருப்பார்.

 

‘லொள்ளு சபா’வைத் தொடர்ந்து ‘வீராப்பு’, ‘வேலாயுதம்’ என பல படங்களில் நடித்தாலும், சந்தானத்தின் படங்களிலே அவரது கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன. குறிப்பாக ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘குலு குலு’, ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’, படங்கள் அவரை தனித்துக் காட்டின. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாகவும், தனக்கே உரிய மாடுலேஷனில் கச்சிதமாக வெளிப்படுத்துவதில் சேஷு கவனிக்க வைப்பவர். சிறிய நேரம் என்றாலும், அவர் வந்து செல்லும் காட்சியில் முத்திரைப் பதிப்பார்.

 

உதவும் மனம் கொண்டவர் 

 

கடந்த மாதம் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “இதுவரைக்கு 10 ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளேன். நான் சிறுவயதில் அவ்வளவு கஷ்டப்பட்டேன். என்னுடைய அக்கா திருமணத்துக்கு அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டார். இன்றைக்கு யாராவது கஷ்டப்படுபவர்களைப் பார்த்தால் எனக்கு அந்த வலி புரியும்.

 

கால் அசைக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உதவி கேட்டிருந்தார். அவருக்கு அண்மையில் நண்பரின் மூலம் உதவி செய்திருந்தேன். அதற்கு உதவியர்களுக்கு இங்கே நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

 

மிக்ஜாம் புயலில் சேஷு வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஏரியாவில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு உதவியுள்ளார். அப்போது ‘குக் வித் கோமாளி’ பாலா உதவிகரமாக இருந்ததை நினைவூட்டியிருந்தார்.

 

மற்றொரு பேட்டியில், “நான் ஒரு ஹார்ட் பேஷன். ஒரு பக்கெட் தண்ணீர் கூட தூக்கக் கூடாது என மருத்துவர் தெரிவித்திருந்தார். மழை வெள்ளத்தின்போது, அரிசியைக் கொண்டு போய் கொடுத்தால் மக்கள் சாப்பிடுவார்களே என ஐந்து, ஐந்து கிலோவாக அரிசி மூட்டைகளைச் சுமந்து சென்று கொடுத்தேன்” என கூறியிருந்தார்.

 

உண்மையில் காலம் மிகவும் கொடுமையானது என்பது சேஷுவின் இல்லாமையிலும் உணர முடியும். பல ஆண்டுகளாகச் சிறு, சிறு கதாபாத்திரங்கள் முகம் காட்டியபடி, ஒரு துணை நடிகராகக் காலத்தை ஓட்டி வந்தவருக்குச் சமீப காலத்தில்தான் கவனத்துக்குரிய நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தும், அதற்குரிய வெகுமானமும் கிட்டியது. இந்தச் சூழலில் அவரது மறைவு துயரத்தை மேன்மேலும் கூட்டவல்லது.

 

திரையிலும், திரைக்குப் பின்னாலும் நகைச்சுவை கலைஞராக, நல்ல மனிதராக வலம் வந்த சேஷு இன்று இல்லை. இருப்பினும் அவரின் படைப்பும், அவர் செய்த உதவிகளும் என்றும் காலத்தால் நினைவுகூரப்பட்டுக் கொண்டேயிருக்கும்!

by Kumar   on 28 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.