LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

ராம்குமார் வித்தியாசமானவன்

ராம்குமார் வித்தியாசமானவன்

 

இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும், பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கிய ராம்குமார் ஏதேச்சையாக திரும்பி பார்க்க அந்த நேரத்தில் ஒரு பெண் கையில் பெட்டியுடன் விழித்துக் கொண்டிருந்தாள். வயது இருபத்தி மூன்று அல்லது நான்கு மதிக்கலாம். சிவந்த நிறத்துடன் நாகரிகமாக காணப்பட்டாள். இந்த நேரத்தில் இந்த பெண் இங்கே ஏன் நிற்கிறாள் ? மனது ஒரு பக்கம் கேள்வியை எழுப்பினாலும் யார் நின்றால் நமக்கென்ன? என்று விட்டேற்றியாக இன்னொரு மனம் சொன்னது.

 பேருந்து நிலையம் என்று சொன்னாலும் அது “ நிறுத்தம் “ என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். கோவையிலிருந்து அவினாசி செல்லும் தடத்தில் அங்கிருந்து சில நகர பேருந்துகள் அவினாசிக்கும், சில நகர பேருந்துக்கள் கோவைக்கும் செல்லும். தொலை தூர பேருந்துகள் இந்த இடத்தில் நின்று செல்லும். இந்த பேருந்து நிலையத்தை சுற்றி இருந்த கிராமங்கள் நகரமாக வளர்ந்துள்ளது. அப்படி வளர்ந்த “ சக்தி நகரில் “ நாளை ஒரு இண்டர்வியூவிற்கு தயார் படுத்திக் கொண்டிருந்தவன், கடும் தலைவலி காரணமாக மாத்திரை வாங்கலாம் என்று வந்தவன் மாத்திரை வாங்கிய பின் திரும்பும் பொழுது இந்த பெண்ணை பார்க்கிறான்.

இவளை இது வரை எங்காவது பார்த்திருக்கிறோமா ? என்று யோசனை செய்து பார்த்தான். ஹூஹூம் பார்த்தாக ஞாபகம் வரவேயில்லை. சரி விடு என்று வண்டி நிறுத்துமிடம் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அனிச்சையாக அந்த பெண்ணை பார்த்தான். அந்த பெண் அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பது போல் நின்று கொண்டிருந்தாள். முகத்தில் அவன் எங்கே கிளம்பி விடுவானோ என்ற துடிப்பும் தெரிந்தது. இவனுக்கு தர்ம சங்கடமாகி  விட்டது. இப்பொழுது அப்படியே வண்டியை எடுத்து சென்று விடலாமா? அப்புறம் இரவு முழுக்க மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்காக அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து அவள் பாட்டுக்கு அவனுடன் கிளம்பி விட்டால் அதை விட பெரிய தொல்லை ஏதுமில்லை. இரு தலை கொள்ளி எறும்பு நிலை போல ஆனான்.

இப்பொழுது அந்த பெண் மெல்ல நகர்ந்து அவனிடம் வருவது புரிந்தது. இவனுக்கு என்ன செய்வது என்று திகைத்து அவன் வண்டியில் உட்கார்ந்த நிலையிலேயே இருந்தான்.. சார்… அழைத்த அந்த பெண் நான் கோயமுத்தூர் போக வேண்டும், தெரியாமல் இதுதான் கோயமுத்தூர் என்று இறங்கி விட்டேன். இறங்கிய பின்னால்தான் தெரிந்தது கோயமுத்தூருக்கு இன்னும் இருபத்தைஞ்சு கிலோ மீட்டர் இருக்குதுன்னு. இந்த இடம் எனக்கு புதுசு, அதுவுமில்லாம இந் நேரத்தில இங்க நின்னுகிட்டு இருந்தா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?. அடுத்த பஸ் வர்ற வரைக்குமாவது என் கூட நின்னுட்டு போங்க அப்ப்டீன்னுதான் கேட்கறேன்.

இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. அவள் சொன்னது உண்மைதான். ஆட்கள் நடமாட்டம் குறைய குறைய இந்த பெண்ணின் பாடு திண்டாட்டம்தான். என்ன செய்வது ? அதற்காக இவளுடன் இந்த இடத்தில் நிற்பதற்கும் சங்கடமாக இருந்தது.. கொஞ்சம் நில்லுங்க, தன் கை பேசியை எடுத்தவன் வீட்டுக்கு போன் அடித்தான். அவன் அப்பாதான் எடுத்தார் அப்பா..என்று இழுத்தான்

என்னடா இந்த நேரத்துல வெளியில என்ன பண்றே ? நாளைக்கு இண்டர்வியூவுக்கு போகணுமின்னு சொல்லி கிட்டிருந்தே, நேரத்துல வந்து படுத்தாத்தானே காலையில ரெடியாக முடியும். சொல்லிக்கொண்டே போனார். அப்பா..மீண்டும் இழுத்தான்..என்னடா என்று கேட்டார்.

என்னோட “ ப்ரண்டோட சிஸ்டர் “ நாளைக்கு இண்டர்வியூவிற்கு அதே கம்பெனிக்கு போறவங்க, இங்க வந்து இறங்கிட்டாங்க, அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரட்டுமா ? கொஞ்ச நேரம் மெளனம், அம்மாவிடம் ஏதோ பேசுவது கேட்டது. அம்மா “கொடுங்க போனை” என்று கேட்பதும் கேட்டது.. ஏண்டா அந்த பொண்ணு இங்க வருமுன்னூ இது வரைக்கும் சொல்லவேயில்லை.. “இல்லேம்மா” இப்பத்தான் பிரண்டு போன் பண்ணி சொன்னான். இறங்கி நம்ம வீட்டுல தங்கிட்டு காலையில போயிடுவா. அப்படீன்னு சொன்னான். அதுதான் உங்கிட்ட சொல்லிட்டு கூப்பிட்டு வரலாமுன்னு இழுக்க..சரி சரி பத்திரமா கூட்டிட்டு வந்து சேரு.அம்மா போனை அணைத்தாள்.

அப்பா என்று மூச்சு வாங்கியவன் எங்க “பேரண்ட்ஸ்” கிட்ட சொல்லிட்டேங்க, நீங்க எங்க வீட்டுல இன்னைக்கு தங்கிட்டு காலையில போயிடுங்க, உங்களுக்கு நாளைக்கு கோயமுத்தூருல இண்டர்வியூன்னு சொல்லியிருக்கேன், நீங்க எங்க வீட்டுல கேட்டாங்கன்னா அதையே சொல்லிடுங்க. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நான்கைந்து பேர் இவர்களை சுற்றி நோட்டமிட ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் இங்கிருந்தால் தேவையில்லாத குழப்பம் வரும் என்று நினைத்தவன் சரி ஏறுங்க, என்று அவளை ஏற்றிக்கொண்டு விரைந்தான். அந்த பெண் சற்று நிம்மதி அடந்தவள் போல் இருந்தாள்.

வாசலிலே அப்பாவும் அம்மாவும் நின்று கொண்டிருந்தனர்.’வாம்மா’ என்று அழைத்த அம்மா அடுத்த நொடியே ஏம்மா நேரத்துல கிளம்பி வரமாட்டியா ? வயசுப்பொண்ணு இந்நேரத்துக்கு வந்து இறங்கினா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க ? ஆரம்பித்து விட்டாள். அப்பா சரி சரி அந்த பொண்ணு சாப்பிட்டிருக்க மாட்டா !, சாப்ப்பிட வச்சு சீக்கிரம் படுங்க நாளைக்கு இண்டர்வியூ இருக்கு, சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டார்.

 ராம் குமார் நீங்க என் ரூம்ல படுத்துக்குங்க, சொல்லி விட்டு முன்னறை ஹாலில் வந்து படுக்கையை விரித்து படுத்துக் கொண்டான். அவனது தலைவலி மாத்திரை போடாமலே காணாமல் போயிருந்தது. படுத்தவன் ஆச்சர்யப்பட்டுக் கொண்டான். அரை மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து விடுகிறது. இந்த பெண் யாரென்றே தெரியாது அரை மணி நேரம் முன்னால் தனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று தெரியாது. எப்படியோ அந்த பெண்ணை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தியுடன் உறங்கிப்போனான்.

காலையில் இருவருமே ஒன்றாக கோவை செல்லும் பேருந்தில் ஏறினர். இவனே இருவருக்கும் பயணச்சீட்டு எடுத்துக் கொள்வதாக சொல்லி பின்புறம் ஏறிக்கொண்டான். கோயமுத்தூர் வந்தவுடன் அந்த பெண் நன்றி கூறி விடை பெற்றாள். அவளை பற்றிய மேலும் விவரங்களை கேட்க ராம்குமாருக்கு இண்டர்வியூவிற்கு செல்வதால் நேரமில்லாமல் போய்விட்டது. போன பின் நினைத்தான் அடடா போன் நம்பராவது வாங்கியிருக்கலாம்.

இண்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குக்குள் நுழைந்தவுடன் அனைத்தும் மறந்து விட்டான். இவன் அழைப்பிதழ் காட்டியவுடன் முன்னால் உட்கார சொன்னார்கள். பேரை கூப்பிடும்போது வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். காத்திருக்க ஆரம்பித்தான். அவனுடன் இப்பொழுது பத்து பேருக்கு மேல் வந்து சேர்ந்து விட்டனர். நேரம் ஓடிக்க்கொண்டே இருந்தது. ஒவ்வொருவராக கூப்பிட ஆரம்பித்தார்கள்.

இவன் உள்ளே சென்றவுடன் ஆச்சர்யப் பட்டான். கேள்வி கேட்பதற்காக உட்கார்ந்திருந்த மூவரில் நேற்று இரவு இவன் வீட்டில் தங்கிய பெண் உட்கார்ந்திருந்தாள். மனதை பதில் சொல்ல தயார் படுத்திக்கொண்டான்.

கேள்விகள் மூவரிடமிருந்து வர முடிந்தவரை பதில் தந்தான். எல்லோரையும் காத்திருக்க சொன்னார்கள். ராம்குமார் உட்பட மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்கள். தேர்வு பெற்றவர்களில் ராம்குமாரை தவிர மற்றவர்கள் சந்தோசப்பட்டனர். ராம் குமார் மெல்ல எழுந்து தேர்வு பெற்ரவர்கள் பெயரை வாசித்தவரிடம் சென்று சார் தயவு செய்து தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள், எனக்கு இங்கு வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்றான்.

அவர் வியப்புடன் என்ன சார் உங்களை விட மத்தவங்க நல்லா பண்ணியும் உங்களைத்தான் எடுக்கணும்னு அகல்யா மேடம் ரொம்ப வற்புறுத்துனாங்க, நீங்க என்னடான்னா வேண்டாங்கறீங்க. அவங்களுக்கு என்னோட நன்றியை தெரிவிச்சுக்கரேன் சார், வர்றேன் சார் சுற்றியுள்ளோர் அவனை யார் இவன் ? பைத்தியக்காரானாய் இருக்கிறான் என்பது போல பார்த்தார்கள்.

அவன் செய்தது சரியா ? தவறா ? என்பது அவனுக்கு புரியவில்லை. ஆனால் மனது மட்டும் கம்பீரமாய் உணர்ந்தது.  

Ramkumar different man
by Dhamotharan.S   on 18 Jan 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.