LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

ட்ரான்ஸ்பர்

ட்ரான்ஸ்பர்

            அலுவலகத்திற்கு கிளம்ப பிளாட்டை விட்டு வெளியே வந்து, கீழ் தளத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுக்கும்போது எதிரில் மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன் தன் தோள் பையுடன் காரில் ஏறுவதை பார்த்தான் சற்று ஒதுங்கி நிறுத்தினான்.

     காரில் ஏறப்போகும் போது திரும்பி பார்த்தவள் இவன் வண்டியுடன் நிற்பதை பார்த்து விட்டு அப்படியே இறங்கி வந்து வாழ்த்துக்கள் சார், உங்க மனைவி எப்படி இருக்கறாங்க?

     நல்லாயிருக்காங்க, முகத்தில் மெல்லிய புன்சிரிப்பை காட்டினான், ஓ.கே அப்புறம் பார்க்கலாம், சொல்லியபடியே காரில் ஏறிக்கொண்டாள்.

      ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, பரிமளா ராமச்சந்திரன் இப்படி இறங்கி வந்து தன்னிடம் பேசிவிட்டு செல்வது. அவர்களை பொருத்தவரை தான் பதவியில் இருப்பதும், அதே தோரணையுடனே வீட்டுக்கு வருவதும். இதனால் அக்கம் பக்கம் பெண்களுடன் பேசுவது தனக்கு கெளரவ குறைச்சல் என்று நினைக்கும் இரகம். இவன் மனைவியே இரண்டு மூன்று முறை நேரடியாக இவளிடம் வாங்கி கட்டி அனுபவித்திருக்கிறாள்.

        அன்று அவள் அலுவலகத்திலிருந்து வர லேட்டாகி விடும் என்பது தெர்ந்து விட்டதால் குழந்தைகள் பள்ளி விட்டு வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்கள். அதனால் எதிர்த்த பிளாட் வீடு மிசஸ் பரிமளாவுடையது என்பதால் அவர்களுக்கு போன் செய்து விசயத்தை சொல்வதற்குள் “இது என்ன நியூசென்ஸ்ஸா இருக்கு” எனக்கெல்லாம் இதுக்கு நேரமில்லை, அதுமட்டுமில்லை இனிமே இந்த மாதிரி வீட்டு சமாச்சாரத்துக் கெல்லாம் எனக்கு போன் பண்ண கூடாது என்று சொல்லி விட்டாள். பிறகு அடுத்த வீட்டுபெண்ணிடம் போன் செய்து அவள் குழந்தைகள் இருவரையும் உள் அழைத்து இவள் வரும்வரை உட்கார வைத்து கொண்டாள்.

    அதன் பின் இவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் ஒருவாரம் இருந்து, இவன் ஒருவனே குழந்தைகளை பார்த்துக்கொண்டு, மருத்துவமனைக்கும் ஓடி அவளை கவனித்து கொண்டு, எப்படியோ சிரமப்பட்டு வீட்டுக்கு கூட்டி வந்தான். அதிலிருந்து வேலைக்கு போவதையும் நிறுத்தி விட்டாள். வருமானம் குறைந்தாலும் ஒரு நிம்மதி வந்து சேர்ந்திருந்தது அந்த குடும்பத்துக்குள்.

    எதிரில்தான் அவள் வசித்தாலும் இதுவரை என்ன ஆச்சு? என்று கேட்டதில்லை, சில நேரங்களில் எதிரெதிரே சந்தித்து கொண்டாலும் பேசாமல்தான் சென்றிருக்கிறாள். இன்று அதிசயமாய் அவளே வந்து பேசி விட்டு போகிறாள்.!

         அலுவலகத்திலும் அன்று ஆச்சர்யகரமான விசயமாகத்தான் இருந்தது. அவனை வம்படியாக ஏதேனும் ஒரு குறை சொல்லி திட்டி கொண்டிருந்த மேலாளர் பரமசிவம் அவனை அழைத்து அன்பொழுக பேசினார். நான் திட்டுனதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க, உங்க நன்மைக்குத்தான் செஞ்சேன்.

            சிரிப்பு வந்தது. வெற்று மனிதனின் பொறாமை குணத்தால் இவர் பல முறை தன்னிடம் சீண்டியதையும், இவனது ஒரு சில கதைகளும், கவிதைகளும் பத்திரிக்கையில் வந்து விட்டது என்று அலுவலகத்தில் காண்பித்தபோது “ இவர் இது என்ன ஆபிசா? இல்லை கதை எழுதற மடமா? இதெல்லாம் எனக்கு பிடிக்காது, முகத்தில் அடித்தாற்போல பல பேர் முன்னால் சொல்லி விட்டு சென்றவர்.

     இவன் முகம் கறுத்து தலை குனிந்த போது விடுப்பா அந்த ஆளு எப்பவும் இப்படித்தான், அடுத்தவன் நல்லா இருந்தா பொறுக்காது, கண்டுக்காதே மனம் தேற்றினார்கள் அருகிலிருந்தவர்கள்.

      இவன் மேசைக்கு  அலுவலகத்தில் இருந்தவர்கள் தேடித்தேடி வந்து பேசிவிட்டு சென்றார்கள். இவனிடம் அதிகமாக பழக்கம் வைத்து கொள்ளாத டெஸ்பாட்ச் காமேஷ்வரன் கூட வலிய வந்து பேசினார். இவர் வேறொருவரிடம் தன்னை வர்ண தீட்டை சொல்லி மட்டம் தட்டி பேசியதை அவர் வந்து இவனிடம் சொன்னதும்  ஞாபகம் வந்தது. சிரிப்புத்தான் வந்தது.

       ஐந்து மணி வரை இப்படி விசாரிப்புகள் வந்து போய்க்கொண்டிருக்க, மாலை அனைவரும் போன பின்னால், இவனுடனே நான்கு வருடங்களாக பணி செய்த உதவியாளர் முருகேசன் தயங்கி தயங்கி வந்தார். சார் மனசு சங்கடமா இருக்கு, நீங்க நாளையில இருந்து இங்க வரமாட்டீங்கன்னு நினைக்கறப்ப.., எனக்கு இன்னும் ஒரு வருசம்தாம் இருக்கு சர்வீஸ் முடிய, உங்களை மாதிரி ஒருத்தர் இங்கிருந்தா எனக்கு ஓய்வுபெறப்ப என்னென்னெ செய்யணும்னு சொல்லி தர்றதுக்கும், செஞ்சு கொடுக்கறதுக்கும், நீங்க இருக்கறீங்கன்னு நம்பிக்கிட்டிருந்தேன். இப்ப..கண் கலங்கியது.

       அவரின் தோளை பற்றி தேற்றினான், இங்க  பாருங்க, எதுக்கும் கவலைப்படாதீங்க, என்னைய விட நல்ல ஆளு இங்க வருவாரு, நீங்க வீணா மனசை போட்டு குழப்பிக்காதீங்க.

       அலுவலகம் அவனை அன்று மாலை மொத்தமாக துப்பி விட்ட மகிழ்ச்சியில் அலுவலக முன் விளக்கு போட்டிருந்தது. மணி ஏழாகிவிட்டதா? முருகேசன் போன பின்னால் அலுவலகத்தில் இருந்த இலக்கிய நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து பேசி கடைசியில் விடைபெறுவதற்கு இவ்வளவு நேரமாகி விட்டது.

      தனது வண்டியை எடுத்து வெளியே வரும்போது மனசு வெறுமையாக இருந்தது. இனி மீண்டும் இந்த ஊருக்கு தன்னுடைய மிச்சம் இருக்கும் பதினைந்து வருட சர்வீசில் வருவோமா?

          அவனுடைய நண்பர்களை விட அவனை ஒதுக்கியவர்களும், ஒதுங்கியவர்களும் இன்று வலுக்கட்டாயமாக தன்னிடம் வந்து பேசிவிட்டு சென்றது மனதுக்குள் ஓடியது. காரணம் புரிந்தது “இந்த மனித இயல்புகளில் ஒன்றுதானே” விலக்கி வைக்கப்பட்டவை, விலகியவை எல்லாமே “இனி இவன் இங்கு வரவே மாட்டான் என்று தெரிந்தவுடன் தங்களை பற்றிய அவனது அபிராயத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இனி நாளை வரமாட்டான் என்னும் தைரியம்தான். அதே போல்தான் மிசஸ் பரிமளா ராஜேந்திரனும் கூட நாளை காலையில் பிளாட்டை விட்டு காலி செய்து போகப்போகிறார்கள் என்று தெரிந்து கொண்டதால் தன்னை பற்றிய மதிப்பீட்டை இவனின் பார்வைக்கு மாற்ற முயற்சித்தது.

        பிரிவுகள் மட்டுமே மனிதர்களின் எண்ணங்களை மாற்றுகின்றனவோ? இருக்கும் வரையிலும் அவனை திட்டி தீர்ப்பவர்கள் அவன் மறைந்து விட்டான், அல்லது இவன் அல்லது இவளின் எதிரில் வர வாய்ப்பில்லை என்று உணரும்போது சடாரென இவர்கள் அவர்களை பற்றிய மதிப்பீடுகளையும் மாற்றி கொள்கிறார்கள்.

     உள்ளே நுழையும்போது ஏங்க எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டோம், வெளிய போய் எல்லாரும் டிபன் சாப்பிட்டுட்டு வந்துடலாம். காலையில வண்டி வந்துடுமில்லை, மனைவி கேட்டாள். அஞ்சு மணிக்கு வந்துடும், ஒன்பது மணிக்கெல்லாம் ஈரோடு போயிடலாம். வீட்டுல உங்களை இறக்கிவிட்டுட்டு, சாமான் எல்லாம் இறக்கி வச்சுட்டு நான் ஆபிசு, போய் ஜாயின் பண்ணிட்டு. முடிஞ்சா பரிமிசன் வாங்கிட்டு வந்துடறேன். மூணு கிலோ மீட்டர் தூரம்தான் நாம இருக்கற இடத்துல இருந்து ஆபிசு இருக்குது.  மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

     குழந்தைகள் இரண்டும் தாங்கள் வெளியூர் போகப்போகிறோம், அங்கதான் படிக்கபோறோம், ஸ்கூல் எல்லாம் எப்படி இருக்கும்?  கற்பனையில் லயித்தபடி அதனை விசாரிக்க வேண்டி அவனருகில் வந்து கையை பிடித்து கொண்டனர்.  

Transfer
by Dhamotharan.S   on 21 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.