LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

வீடு திரும்பிய பாரி

வீடு திரும்பிய பாரி

எழுதியது -ஹமீது தம்பி .

கக்கத்தில் இருந்த குழந்தையோடு  அஜீசா “யாருவேணு” என்று கேட்டபோது, தங்கைதான் என்று தெரிந்துகொண்டு “நான் பாரிகாக்கா” என்று அறிமுகம் செய்துகொண்டான் . எந்த என்று ஆரம்பித்தவள் ,பிறகு கூடப்பிறப்புதான்,என்று உணர்ந்துகொண்டு “உம்மா காக்கா வந்துட்டாங்க” என்று கத்திக்கொண்டு அந்த ஓட்டு வீட்டுக்குள்  ஓடினாள். படுக்கையில் கிடந்த உம்மா எழுந்திரிக்கமுயன்றுகொண்டே எந்த காக்கா?

 “நம்ம பாரிகாக்கா’ என்றதும்

 உம்மாவுக்கு நம்பமுடியவில்லை.

 “யா ரப்பே எம்புள்ளைய நா மவுத்தாவமுந்தி கொண்டுக்குட்டுவந்து சேத்துட்டியே” என்று கண்கள் கலங்க இருகைகளையும் நீட்டி அழைத்தார்.

பாரி ஒரு கொழும்பு சபராளி(பிழைக்க வெளிநாடு சென்றவர்) . சிறுவயதில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு பதினைந்து வயதில் ,இலங்கைக்கு கள்ளத்தோணியில் போனவன் , அட்ரஸ் இல்லாமல் இருபத்தி ஐந்து  வயது வரை இருந்து விட்டு ,ஒரு நாள் ஊருக்கு திரும்பி வந்தான் . படுக்கையில் இருந்த உம்மாவுக்குகூட அடையாளம் தெரியவில்லை . வாப்பா மவுத்தாகி இருபது வருடங்கள் ஆகி இருந்தது .வீட்டில் உம்மாவுக்கு. தங்கச்சியின் பாதுகாப்பு மட்டுமே . குடும்பத்தினர் அவன் ஒரேயடியாக தொலைந்து போய்விட்டான் என்று அவனையே முழுவதுமாக மறந்துபோய் இருந்தார்கள். ஒரு காலைப்பொழுதில் திடீரென்று அவர் வீட்டுவாசலில் நின்றபோது யாருக்கும் அடையாளம்தெரியவில்லை .

 

தான் பார்த்த வாழ்வாட்டியான உம்மா இல்லை இப்போது .அந்த அழகான உம்மா இப்போது பழுப்பான வெள்ளைபுடவையில் முடியெல்லாம் வெளுத்துப்போய், பஞ்சையாய் அழுக்கு மெத்தையில் படுத்திருந்ததை பார்த்தபோது, அத்தனைக்கும் காரணம் தான்தான் என்ற குற்றவுணர்வில் ,”என்ன மன்னிச்சிருங்கம்மா” என்று கதறி அழுதது,உம்மாவுக்கு பொறுக்கவில்லை . “நீ வந்ததே போதுவாப்பா.,ஒன்னே பாக்கனுங்ற ஹாஜத்த அல்லா நெறவேதீட்டானே அதுபோதும்” என்று மகனை உச்சி மோர்ந்தார். கொழும்புக்கு போகும் முன் பார்த்த உம்மா காதுமுழுதும் போட்டிரிருந்த  அலுக்கத்துகள் காதுகளையே மறைத்திருக்கும். கைநிறைய காப்பும் ,பட்டினக்காப்பும் நிறைந்திருக்கும் .எந்நேரமும் வெற்றிலை போட்டு மணக்கும் சிவந்த வாய் .பெரிய வெள்ளி தண்டையோடு, கொத்து கொலுசு என்று எல்லாம் நிணைவில் வந்துபோய் வாட்டியது .உம்மாவின் மனமென்றால் அது வெற்றிலை போட்டுக்கொண்டு அவர்கள்பேசும்போது வரும் தாம்பூல மனம்தான். சமயத்தில் பேசும்போது உம்மாவின் எச்சி பன்னீராக தெறிக்கும் . இப்போது உம்மாவின்படுக்கையில் இருந்து வந்த சிறுநீர்வாடை தன்துரோகத்தின் மனமாக பட்டது.

ஒரு அடைமழைகாலத்தில் மீனுக்கு போன வாப்பா தாவூது ,காணாமல் போனபின், பாரி காக்கா இலங்கைக்கு போன பொறவு, போன புதிதில் சில வருடங்கள் அவன் எப்போதாவது உண்டியல் மூலம் அனுப்பும் ஐம்பது அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டத்தையும் , காசிம் மச்சான் , நல்லமனம்கொண்டு மாமியின் எதிர்ப்பையும் மீறி தன்னை கல்யாணம் செய்ததையும் அஜீசா சொன்னபோது, தான் கடமை தவறிய குற்றஉணர்வோடு பலநாள் அழுதுகொண்டிருந்தான். இருந்தாலும் இனி தான் அநாதை அல்ல என்ற உணர்வு, பாதுகாப்பாக இருந்தது..கொழும்புக்கு போன சமயத்தில் மாமி மகன் காசிம் சின்ன பையன்,இப்போது அடையாளம் சுத்தமாக மாறி இருந்தான். ” மச்சான் இனிமே எந்த கவலையும் படாதீங்க. நாங்க பாத்துக்குறோம்” என்று ஆறுதல் தந்தான். சின்னத்தம்பி மரிக்கா வீட்டுல டிரைவரா இருக்குறதா சொன்னான். பாரி அவனுக்கும் ஒரு நல்ல வேலை வாங்கித்தரும்படி காசிமிடம் சொன்னான். “எனக்கு இங்க யாரையும் தெரியாது காசிம்   . நீதான் செல்லணும் ” என்றார் இலங்கை மனம் கலந்த தமிழில்.

” எல்லா வேலையும் தெரியும் மச்சினம்புள்ள , ரக்வானைலே இருக்ககொள்ள நலீம் ஹாஜியாருக்கு எல்லாம் நான்தான் செய்யொணும். அவர் வெளிய போக்கொள்ள உக்கார  புட்டுவம் மொதக்கொண்டு நான்த தூக்கிட்டுபோவன்”. கடசி காலத்துல அவருக்கு பீமூத்துரம் மொதக்கொண்டு நாதே கலுவிவுடுவன்.ஹாஜியாருக்கும் எங்கடமேல மிச்சம் பிரியம் . அவர் மவுத்துக்கு பொறவு கொழும்புக்கு வந்து நாம்படாத பாடில்ல. எங்கட நாயனுக்கு தெரியும்.” என்றான்.

 காசிம், சின்னத்தம்பி மரிக்காரிடம் சொல்லி வேலைவாங்கிதருவதாக சொன்னான் . “இன்னக்கி சவுக்கையில் அசருக்கு பொறவு பார்த்து கேட்போம்”  என்றான். வீட்டுலே பாக்க இஸ்டப்படமாட்டார் என்றான் .

“மச்சான் தொளுவைலாம் உண்டா ?” என்றான் காசிம் .

பொடுபோக்காதான் தொழுவேன் .நலீம் ஹாஜியார்டே இருந்தமட்டும் ஒருவேளதொழுவ உடமாட்டேன். கொழும்பிலே பட்ட கஷ்டத்துலே தொழுவ நேரமில்லாமபோச்சு .கொத்துவாக்கு மட்டும் கட்டாயம் செம்மாங்கோட்ட பள்ளிக்கு போயிருவேன் .நம்ம ஊரு தெரிஞ்சமுகம் தேடித்தே போவேன். யாரும் தெரியாது. கடசியா சம்மாட்டி ஊட்டு அபுசாலி காக்காதான் என்ன அடையாளம் கண்டு நீ சரீபு காக்கா மவன் பாரிதானேனு கேட்டார். நான் அழுதுட்டேன். என்றான் பாரி . 

  அப்பாபள்ளி சவுக்கையில் எப்போதும் யாரவது இருந்துகொண்டே இருப்பார்கள்.இளைஞர்களுக்கு சங்கம் என்றால் ,பெரியவர்களுக்கு போக்கிடம் சவுக்கைதான். அப்பாபள்ளியின் உட்புறத்தில் ஜமாஅத் அலுவலகம் இருந்த போதிலும், அதில் சாதாரணமாக குமாஸ்தாவும் பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள் . ஜமாத்தின் நிர்வாகிகள் பொதுவாக பள்ளியின் முன்புறம் உள்ள சவுக்கயில்தான் இருப்பார்கள். தொழுகை நேரங்கள் முடிந்தபிறகு, அங்கு ஜமா களைகட்டும். ஜமாஅத் தலைவர் சின்னத்தம்பி மரிக்கா முக்கியமான புள்ளி. ஜமாஅத் கூட்டங்கள் பள்ளியின் உட்புறத்தில் நடந்தாலும். சாதாரண தினப்பிரட்சினைகள், அங்கு அலசப்படும். அதுபோக அரசியல், ஊர்வம்பு எல்லாம், என்று ஒரு அரட்டை அரங்கம் நடக்கும் . தெருவுக்குள் போகின்றவர்கள் சவுக்கையை தாண்டித்தான் போகவேண்டும். யார் கண்ணிலும் படாமல் போகவேண்டுமென்றால் மறைப்பு கட்டி வண்டியில்தான் போகவேண்டும்.

காசிமும், பாரிகாக்காவும்,  சின்னத்தம்பி மரிக்காவை சந்திப்பதற்காக அசர் தொழுகைக்கு அப்பா பள்ளிக்கு போனார்கள். அவருடைய பொட்டுவண்டியை பார்த்ததும் அவர் தொழவந்திருப்பது உறுதியானது . 

பாரிக்குஅப்பாபள்ளிக்கு தொழவந்த இளமைக்காலம் நினைவில் வந்துபோனது .ஆரம்பத்தில் ஐந்து வயதில் வாப்பாவோடு அப்பாபள்ளிக்கு தொழவருவான்.அதுதான் தொழும்பழக்கத்தின் ஆரம்பம். எந்தக்காலத்திலும் தொழுகையை விடக்கூடாது என்பது வாப்பாவின்  அறிவுரை . பலகாலம் அந்த அறிவுரையை  விடாது கடைப்பிடித்த அவன் , வாழ்கையின் கடுமையான பாதைகளில் அவனுக்கு இரண்டாம் பட்சமாகிப்போனது. ஆனால் தொழுகையில் பொடுபோக்கான விஷயம் அவனை உறுத்திக்கொண்டேதான் இருந்தது. இப்போதுகூட கொழும்புல அபுசாலி காக்கவ பாத்தது கூட தொளுவப்போனதுக்கு கெடச்ச கூலிதான் என்று நம்பினான். முன்பு சிறுவயதில் பார்த்த அப்பாபள்ளி, முழுவதும் மாறிப்போய் இருந்தது. அதன் பழையகாலத்து பெரிய உயரமான படிக்கட்டுகளோடு கூடிய மினாரா இப்போது இல்லை . அந்த சுண்ணாம்பு கட்டுமானம் எல்லாம் இடிக்கப்பட்டு புது மோஸ்தரில் கட்டப்பட்டிருந்தது. இதுவும் அழகுதான் . அரபு நாட்டில் உள்ள ஒரு நவீன பள்ளியின் சாயலில் கட்டியிருப்பதாக சொன்னார்கள் . ஆனாலும் பாரி காக்காவிற்கு அந்தநாள் பழங்காலப்பள்ளி இல்லாதது ,தந்தையின் இழப்பை போன்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது .

அப்பாபள்ளியில் அடங்கி இருந்த சேகு அப்பாவின் அடக்கஸ்தலம் , இருக்கும் இடம் தெரியாமல் ஒதுக்கமாக போய்விட்டிருந்தது . காலங்களின் மாற்றம் மக்களிடம் எத்தனை மனமாற்றங்களையும் கொண்டுவருகிறதென்று பாருங்கள் . ஒருகாலத்தில் திருமணம், சுன்னத் என்னும் மார்க்க விருத்தசேதனம் போன்ற விசேசங்களில் சேகுஅப்பா கபுரில் ,பைத்தில் (ஊர்வலம் ) வந்து பாத்திஹா ஓதி , துவா கேட்பது வழக்கமாக இருந்தது . அந்தப்பழக்கம் இப்போது இல்லை.

பழையகாலத்து ஹவுல்(தொழுகைக்கு ஒழு (சுத்தம்) செய்துகொள்ளும் தண்ணீர்த்தொட்டி நீச்சல் குளம்போல் இருந்த அது, இப்போது நவீன குளியலறை தொட்டி அளவில் இருந்தது ,அத்தோடு இருபது ,முப்பது தண்ணீர் குழாய்கள் இருக்கை வசதியுடன் ஒழுச்செய்ய வசதியாக அமைக்கப்பட்டிருந்தது . நவீன கழிப்பறைகளும் ஐந்தாறு இருந்தது. முன்பு சுன்னாம்புத்தரையில் கோரைபாய் போட்டிருந்த தொழும் இடத்தில் பலபல என்று க்ரெனைட் தரை போட்டு காஸ்மீரத்து கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. பெரிய மினாராவை இழந்த இடத்தில் ஒரு புது மோஸ்தரில் ரெடிமேட் மினாராவில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்தது. என்றும் போல் ஊரின் செல்வச்செழிப்பை எதார்த்தமாக பறைசாட்டியது,

அசருக்கான பாங்கு சொன்னார்கள் . பாரிகாக்க, அந்த நாளில் சுல்தான் காக்கா மினாராவில் ஏறி பாங்கு சொல்லும் இனிமையை நினைத்துபார்த்தான். இரண்டு மாடி உயரம் இருக்கும் அந்த மினாராவிளிருந்து ஒலிக்கும் அவருடைய பாங்கோசை ஒலிபெருக்கி இல்லாமல் பல தெருக்களுக்கு கேட்கும் . பெரும்பாலான மக்களுக்கு அதுதான் நேரம் காட்டும் கடிகாரம் .

இப்போது ஒலிபெருக்கியில் பாங்கோசை கேட்டது .பாங்கு சொல்லுபவர் எங்கிருந்து சொல்கிறார் என்று பார்க்கமுடியவில்லை. இவருடைய பாங்கும் இனிமையாக இருந்தபோதும், பழைய சினிமாப்பாட்டுக்களைபோல, சுல்தான் காக்காவின் பாங்கின் இனிமைக்கு அருகில் இல்லை . இருவரும் ஒழு செய்துகொண்டார்கள். காசிம் தண்ணீர்குலாயில், இருக்கையில் அமர்ந்து ஒழு செய்தான். பாரி காக்கா பழைய நினைவுகளோடு  ஹவுலில் ஒழுச்செய்தான். முன்பு சிறிய பள்ளியாக இருந்தபோது தினத்தொளுகைக்கு நல்ல கூட்டம் இருக்கும் .இப்போது ஜனத்தொகை பன்மடங்கு கூடிவிட்ட போதிலும் இரண்டு மூன்று சப்பு(வரிசை )களுக்குமேல் ஆட்கள் இல்லை.

தொழுகை முடிந்ததும் முதலில் வெளியே வந்தது பாரிதான். பிறகு காசிம் வந்ததும் சதுக்கையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து சின்னத்தம்பி மரிக்காவுக்காக காத்திருந்தார்கள். தொழுகை முடிந்து ஒவ்வொருவராக வரத்தொடங்கினர் ,வந்தவர்கள் சதுக்கையில் உட்காரத்தொடங்கினர். வெளியிலிருந்த கரும்பலகையில் எழுதியிருந்த அறிவிப்பை பார்த்த காசிம் மச்சான் ஜமாஅத் மீட்டிங் இருக்குது .மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ளே முதலாளிய பாத்துரனும் என்று இருவரும் பள்ளியின் வாசல் அருகில் நின்றுகொண்டனர். கடைசியாகத்தான் சின்னத்தம்பி மரிக்கா வந்தார் . காசிமை பார்த்ததும் “என்ன காசிம் ராம்னாட்டுக்கு புள்ளங்க போவணும்னு சொன்னாங்களே ,போவலையா ?” என்றார் “.இல்ல வாப்பா நாளக்கி காலைலே போவலாம்னு உம்மா சொன்னாங்க வாப்பா “ என்றான்

வாப்பா , உம்மா என்று சொன்னது மரிக்காவையும் அவர் மனைவியையும்தான்.

“ஆமா இது யாரு” என்றார் அருகில் நின்ற பாரியை பாத்ததும் .

“ பாரி மச்சான் . கொழும்புலேருந்து வந்திக்கிராங்க”  என்றான் .

“யாரு சிறுவயசுல காணாப்போன சரீபு காக்கா மவனா ? “எங்கிருந்தே என்றார்  பாரியிடம் .

“இங்கேருந்து போய் மிச்ச காலம்  ரக்வானையிலே இருந்தன். பொறவு கொழும்புலே நலீம் ஹாஜியார்ட இருந்தன்”.என்றான் பாரி.

“ சோனவன் தெருவுல இருக்கிற கேஎஸ்செம் எக்ஸ்போட்டு முதலாளி  நலீம் ஹாஜியாரா” என்று கேட்டார் .

“ஆமாம் வாப்பா “ என்றான் .

“வாப்பா, மச்சானுக்கு ஏதாவது வேல குடுங்க ,என்ன வேலனாலும் செய்வாங்க” என்றான் காசிம்.

“கொஞ்சம் இரிங்க ஜமாஅத் மீட்டிங் முடிஞ்சதும் பாக்குறேன்” என்றார்.

இருவரும் கூடியிருந்த ஜமாஅத் கூட்டத்துடன் அமர்ந்து கொண்டனர் .நடந்த கூட்டம் வாலிபர் சங்கம் பற்றியதாக இருந்தது .

சங்கம் பற்றி வந்திருந்த  புகார் கடிதங்கள் வாசிக்கப்பட்டன. முக்கியமாக கவணித்துக்கொள்ள அட்டெண்டர் இல்லை என்பதுதான் . கூட்டிப்பெருக்க சுத்தம் செய்ய , தவறான நடவடிக்கைகளை தடுக்க அட்டெண்டர் ஒருவரை போடவேண்டுமென்பதுதான்.அங்கு இளைஞர்கள் நடக்கும் தவறான நடக்கும் நடத்தைகள் பற்றி பேசப்பட்டது . சங்கத்தின் உள்ளே சிகரெட் பிடிப்பதும் ,காசு வைத்து சீட்டு விளையாடுவதும் முக்கியமாக பேசப்பட்டது . இவற்றை ஒழுங்கு படுத்த ஒரு அட்டெண்டர் தேவை என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது . பின்னர் யாரைப்போடுவது, என்ன சம்பளம் கொடுப்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. சம்பளமாக 100 ரூபாய் கொடுக்கலாம் என்று முடிவானது .பலர் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர்களை சிபாரிசு செய்தார்கள்.

கடைசியாக தலைவர் சின்னத்தம்பி மரைக்காரின் பதிலுக்காக காத்திருந்தார்கள். சின்னத்தம்பி மரைக்காயர்

“ நம்ம சரீபு காக்கா மவன் பாரி ரெம்ப நாள் சிலோனுலே இருந்துட்டு இருவது வருசத்துக்கு  பொறவு வந்திக்கிறான். சரீபு காக்கா ஜமாத்துக்கு எப்போவும் ஒதவியா இருந்த நல்ல மனுஷன் . பாரிக்கே இந்த அட்டண்டர் வேலைய குடுப்போம்.நல்ல பிள்ளையா தெரியுது” என்றார் .,

                  ஜமாஅத் மீட்டிங் முடிந்ததுமே பாரியின் கையில் சங்கத்து சாவியை கொடுத்து நல்லவிதம் சங்கத்தை சுத்தமாக வைத்து, சீட்டாட்டம்,சிகரெட் போன்ற தவறான விஷயங்கள் சங்கத்தில் நடக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும்படி ஜமாத்தில் சொன்னார்கள் .மேலும் தவறுசெய்பவர்கள் பற்றி உடனுக்குடன் ஜமாத்தில் தெரிவிக்கும்படி சொன்னார்கள். சாவியை வாங்கியதும் பெரிய பதவி கிடைத்ததுபோல் இருந்தது. சின்னத்தம்பி மரிக்கா தம்பி காலையிலே ஸுபுஹ் தொழுதுட்டு பிஸ்மி சொல்லி வேலைய ஆரம்பி, வாப்பா பேர காப்பத்தனும் என்றார்.

இப்படித்தான் பாரி இருபது ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் வாழத்தொடங்கினான்.

 


by Hamid Thambi   on 01 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.