LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருவள்ளுவரும் பரிமேலழகரும் . நாமக்கல் கவிஞர் நல்லறப் பதிப்பகம்

"திருவள்ளுவரும் பரிமேலழகரும் " . நாமக்கல் கவிஞர் நல்லறப் பதிப்பகம் முதல் பதிப்பு 1999 விலை ₹120 மொத்த பக்கங்கள் 112..
இது ஒரு கட்டுரை புத்தகம் என்று சொல்லலாம்.
திருக்குறள் குறித்த அறிவு பதவுரை விளக்கம் தந்த புத்தகம் என்று சொல்லலாம்.
ஆசிரியர் குறிப்பு:
ஆசிரியர் நாமக்கல் கவிஞர் வெ .இராமலிங்கம் குறித்து அறிமுகம் தேவையில்லை.
" தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும்"
என்னும் இசைப்பாட்டால் தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெருமைக்குரிய கவிஞர் நாமக்கல் கவிஞர் அவர்கள் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டதோடு நிற்காமல் இலக்கிய வளர்ச்சிக்காகவும் உழைத்துள்ளார். அருமையான கவிதைகளையும் தமிழுணர்வு ஊட்டக்கூடிய கட்டுரைகளையும் சுவையான கதைகளையும் படைத்துக் காட்டியவர். அவருடைய பெருந்தொண்டு போற்றி வணங்கத்தக்கதாகும்.
அவருடைய மிகச் சிறந்த கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. தமிழின் தொன்மையையும் மேன்மையையும் தமிழருக்கு விளக்கும் அரிய கட்டுரைகள் கம்பன் கவிதை இன்பக்குவியல் என்று அவர் காட்டுகின்ற பல சான்றுகள் நம் உள்ளத்திற்கு உவகை அளிக்கவல்லவை.
இளைஞர்கள் படித்து எதிர்காலத்தில் தமிழ் உணர்வு உடையவர்களாக விளங்குவதற்கு ஊக்கம் அளிப்பவை. முன்னோர் கட்டிக்காத்து வந்த தமிழ்ச்செல்வம் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். நாமக்கல் கவிஞர் அவர்கள் படைத்த அருமையான படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
##₹
'திருவள்ளுவரும் பரிமேலழகரும்' என்னும் இந்நூல், பரிமேலழகரின் உரையைப் பற்றி நுணுக்கமாக ஆராய்கிறது. பல குறள்களுக்குப் பரிமேலழகர் செய்த உரை பொருத்தமாக இல்லை என்று கூறும் கவிஞர் மிகப் பொருத்தமான உரையை வழங்கத் தவறவில்லை. பரிமேலகழருக்கு எதிர்ப்பா என ஆர்ப்பரிக்கும் புலவர்களும் அமைதியடையும் வண்ணம் நீண்ட விளக்கங்களை இந்நூலுள் அளித்துள்ளார் நாமக்கல்லார். முன்னர் தோன்றிய உரைகள்அனைத்தையும் ஒரு புறம் வைத்துவிட்டு. சுயமாகச் சிந்தித்துச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறார் கவிஞர்.
பரிமேலழகரைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக புதிய உரையை எழுதவில்லை கவிஞர். திருவள்ளுவருக்கு திருக்குறளுக்கு மாறுபட எதையும் கூறக்கூடாது என்பதே நாமக்கல்லார் எண்ணம்.
திருக்குறளைப் பற்றி மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
**
திருக்குறளுக்கு உரை சொல்லும்போது. திருவள்ளுவர் எதைக் கருதியிருக்கின்றார் என்பதை ஆய்ந்தறிந்து சொல்ல வேண்டும். திருவள்ளுவர் கருத்தை அறிந்துகொள்ள முடியாமல் சொந்த யுக்தியைக் கொண்டு உரை செய்துவிட்டாலும், திருவள்ளுவர் எதைச் சொல்ல மாட்டாரோ அதைச் சொல்லி விடாமலாவது உரை காணவேண்டும். பரிமேலழகர் உரையில் அநேக இடங்களில் திருவள்ளுவருடைய கருத்தை ஆராயாமல் அவர் எண்ணாத உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமன்றிச் சில இடங்களில் திருவள்ளுவர் எதைச் சொல்லவே மாட்டாரோ அதை உரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் எதைச் சொல்லமாட்டார் என்பது உண்மையை நாடுகின்ற எல்லார்க்கும் எளிதிற் புலனாகும்.
திருக்குறள் முழுவதிலும் மிகவும் உச்சமான அறவொழுக்கம்தான் சொல்லப் படுகிறது. அற ஒழுக்கத்துக்கு மாறான எதையும் திருவள்ளுவர் சொல்லமாட்டார் என்ற ஒன்றே திருவள்ளுவர் எதைச் சொல்லி யிருக்க மாட்டார் என்ற உணர்ச்சியை உண்டாக்கும்.
திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்க மாட்டார் என்று நாம் நிச்சயமாகக் கூற முடியுமோ அதையே பரிமேலழகர் திருக்குறளுக்கு உரையாகச் சொல்லியிருப்பதை நிரூபிக்க ஒரு உதாரணத்தை மட்டும் உடனே காட்டிவிட்டுப் பின் எடுத்துக் கொண்ட 'தவம்' என்ற அதிகாரத்தை ஆராய்கிறார் நாமக்கல் கவிஞர் அவர்கள்.
உலகத்தில் மனிதனுக்கு மனிதன் என்ற முறையிலாவது அரசனுக்கு அரசன் என்ற முறையிலாவது ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் முதலில் அந்த விவகாரத்தைச் சமாதான முறையிலேயே தீர்த்துக் கொள்ள முயல வேண்டும். அது முடியாமற் போனால் சிறிது விட்டுக் கொடுத்து 'தானம்' என்ற முறையிலாவது தீர்த்துக் கொள்ள முயல வேண்டும். அதுவும் முடியாவிட்டால் 'பேதம்' என்ற முறையில் 'எதிரிக்குச் சொல்லக் கூடியவர்களைக் கொண்டு மனதைப் பேதித்து இளகும்படி செய்ய முயல வேண்டும். அது முடியாது என்று தீர்மானமாகத் தெரிந்துவிட்ட பிறகுதான் 'தண்டம்' என்ற போர் முறையில் இறங்க வேண்டும்.
இதைத் தான் சாம, தான, பேத, தண்டம் என்று சொல்லுவது.
இன்றளவும் உலகத்தில் தோன்றிய எல்லா இலக்கியங்களும், அறிஞர்களும் போதித்து வந்திருக்கிற செயல் முறைக்கான நல்லறிவு இதுதான். இதற்கு முற்றிலும் விரோதமாக. முடியுமானால் முதலில் உடனே போர் தொடுத்து, தண்டோபாயத்தால் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படிப் போர் செய்ய முடியாவிட்டால் மட்டும் பேதம், தானம். சாமம் என்ற மற்ற மூன்று உபாயங்களில் ஒன்றால் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லியிருப்பாரா? சொல்லியிருக்கவே மாட்டார் என்று தான் திருக்குறளைச் சிறிதேனும் அறிந்த யாரும் சொல்லுவார்கள்.
ஆனால், திருவள்ளுவர் இப்படியே சொல்லியிருப்பதாய்ப் பரிமேலழகர் சொல்லுகின்றார். அதுவும், மிக்க அசம்பாவிதமாகச் சொல்லத் தகாத இடத்தில் சொல்லுகின்றார்.
அது எங்கே சொல்லப்படுகிறது. எப்படிச் சொல்லப் படுகிறது.காரியம் செய்ய வேண்டிய முறையைப் பற்றியனவாக 'வினைத்தூய்மை', 'வினைத்திட்பம்', 'வினைசெயல்வகை' என்று மூன்று அதிகாரங்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன.
'வினைத்தூய்மை' என்ற அதிகாரம் ஒவ்வொரு மனிதனும் அவன் செய்யப் போகிற காரியம் குற்றமற்றதா என்பதை முதலில் ஆராய்ந்து அறிந்து கொண்ட பின்பே அதைச் செய்ய முயல வேண்டும் என்ற அறிவைப் புகட்டுவது.
எவ்வளவு இலாபமுண்டாக்கக் கூடியதானாலும் பழி பாவங்களான எதையும் செய்யக்கூடாது என்பது இவ்வதிகாரத்தின் போதனை. அப்படி ஆராய்ந்து பார்த்துத் தூய வினை தான் என்று கண்டபின் அதைச் செய்து முடிக்க வேண்டிய காரிய வைராக்கியத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் புகட்டுவது 'வினைத்திட்பம்' என்ற அடுத்த அதிகாரம்.
அதன் பிறகு செய்யப் புகுந்த காரியத்தை எப்பொழுது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், யாரைக் கொண்டு செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என்பன போன்ற விவரங்களைப் புகட்டுவது 'வினை செயல் வகை' என்ற அதிகாரம்.
இந்த 'வினை செயல் வகை' என்ற அதிகாரத்திலுள்ள மூன்றாவது குறளுக்கு உரை சொல்லும்போது தான் பரிமேலழகர் எதைத் திருவள்ளுவர் சொல்லவே மாட்டாரோ அதைச் சொன்னதாகச் சொல்லுகிறார்.
இந்த அதிகாரத்தின் முதற் குறள்:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
என்பது. இதன் பொருள்: 'ஆலோசனை செய்வதன் முடிவு ஒரு காரியத்தை, அது செய்ய வேண்டியது தானா என்று தீர்மானிப்பது தான். செய்ய வேண்டியது என்று தீர்மானித்துவிட்டால் அதன் பிறகு அதைத் தாமதிக்காமல் செய்துவிட வேண்டும். தாமதிப்பது கெடுதி - என்பது.
ஆனால், செய்ய வேண்டுமென்று தீர்மானித்த காரியத்தைத் தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லாக் காரியத்திலும் ஒரே மாதிரியான அவசரம் காட்டி விடக் கூடாது. ஏனென்றால் செய்யவேண்டியது என்று தீர்மானிக்கிற காரியங்களுள் பொறுத்து நிதானமாகச் செய்யவேண்டிய காரியங்களும் உண்டு. அதனால்;
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
என்று அடுத்த குறளில் சொல்லுகின்றார். இதன் பொருள்: பொறுத்து நிதானமாகச் செய்யவேண்டிய காரியங்களில் அவசரம் கூடாது. உடனே செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது என்பது.
என்றாலும், பொறுத்து நிதானமாகச் செய்யவேண்டும் என்று எண்ணிய காரியத்துக்கும் வாய்ப்பு நேர்ந்து விட்டால் அதையும் உடனே செய்து விடுவது நல்லது. வாய்ப்பு நேர்ந்தால் தான், வாய்ப்பு நேராவிட்டால் அதற்குரிய தருணம் வருகிறவரையிலும் பொறுத்திருந்தே செய்யவேண்டுமென்று அடுத்த குறளில் சொல்லுகின்றார்:
ஒல்லும்வா யெல்லாம்
வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் காரியத்தைச் செய்து விடுவது நல்லதுதான். வாய்ப்புக் கிடைக்கா விட்டால் காத்திருந்து வாய்ப்பான தருணத்தில் செய்ய வேண்டும் என்பதே.
மேற்சொன்ன மூன்று குறள்களுக்கும் திருவள்ளுவர் கருதிய பொருள்கள் மேலே சொல்லப்பட்டவைகளாகத் தான் இருக்க முடியும்.
விதண்டாவாதமாகக் குதர்க்கம் செய்தாலன்றி இந்தக் குறள்களுக்கு வேறு பொருள் சொல்ல மனம் வராது. இந்த மூன்று குறள்களுள் முதலிரண்டு குறள்களுக்கும் சரியாக உரை சொன்ன பரிமேலழகர் மூன்றாவது குறளில் 'வினை' என்ற சொல்லுக்குப் 'போர்' என்று பொருள் செய்து முன் சொன்னபடி மிகவும் அசம்பாவிதமாகத் திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கவே மாட்டாரோ அதைச் சொல்லியிருப்பதாகக் கூறுகின்றார்.
**
இந்த 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்தைச் சிறிது ஆராய்ந்து இவ்வாறு கூறுகிறார் நாமக்கல் கவிஞர் அவர்கள்.
இந்த அதிகாரத்திலுள்ள பத்துக் குறள்களையும் சேர்த்து ஒரு முறை பார்த்து விடுவோம். அப்படிப் பார்த்தால் தான் இந்த அதிகாரத்தின் நோக்கம் என்னவென்பது தெரியும் என்று சொல்லுகின்றார்.
1.சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
2. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.
4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
6.அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.
9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.
10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
இந்தப் பத்துக் குறள்களுள் எது இல்லறத்தைக் குறிப்பது. எது துறவறத்தைக் குறிப்பது என்று பிரித்துக் கூற முடியாது. இல்லறத்துக்கும் துறவறத்துக்கும் பொதுவாகவே கூறப்பட்டிருக்கின்றனவென்றாலும் இவற்றிலுள்ள பதங்கள் இல்லறத்துக்கே பொருந்துவனவாக இருக்கின்றன.
'பிறப்பறுத்தல்' என்ற பயன் துறவறத்துக்கு மட்டுந்தான் என்ற கண்கொண்டு பார்த்தாலும் துறவறத்தோடு சம்பந்தப்படுத்தக் கூடியது ஒரே ஒரு குறள்தான்:
அது,
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
என்பது. இதன் கருத்து:
சாகிற வரைக்கும் ஒருவன் நல்ல அறங்களையே செய்தால் அது அவனுக்கு மறு பிறப்பில்லாமல் தடுத்துவிடும் - என்பது.
இதற்குப் பரிமேலழகர் சொல்லும் உரையும் இந்தக் கருத்துடையதுதான். இந்தக் குறளிலுள்ள எந்தப் பதமும் இது துறவறத்துக்கு மட்டுந்தான் சொல்லப்பட்டது என்று பொருள் கொள்ள இடந்தராது.
பரிமேலழகரும் இந்தக் குறளுக்குச் சொல்லுகின்ற விசேட உரையில், 'இதனான் அறம், வீடு பயக்கும் என்று கூறப்பட்டது' என்றுதான் சொல்லுகிறார்.
இந்தக் குறள் இல்லறமோ துறவறமோ பொதுவாக அறம் செய்வதன் பயனை மட்டும் சொல்லுகிற 'அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது. அதுவும் இல்லறம் துறவறம் என்ற இருவகை அறங்களுள் மிக்கச் சிறப்புடையது என்று திரு வள்ளுவர் உறுதியாகச் சொல்லுகின்ற 'இல்லறம்' என்ற பகுதியை ஆரம்பிப்பதற்கு முன்னால் இது சொல்லப்படுகிறது.
அதனால் 'வீடு பெறுதல்' என்பது இல்லறம் துறவறம் என்ற இரண்டுக்கும் பொதுவானது என்றுதான் திருவள்ளுவர் சொல்லுகிறார் என்பது தெளிவாகிறது.
'வீடுபெறுவது' துறவறத்துக்குத்தான் உரியது என்று திருவள்ளுவர் எண்ணியிருந்தால் இந்தக் குறளை இங்கே சொல்லியிருக்க மாட்டார். ஏன் எனின் துறவறத்துக்கென்று ஒரு தனிப்பகுதியை எழுதியவர் இதை அந்தப் பகுதியில் தான் வைத்திருப்பார்.
பரிமேலழகர் குறித்து குறை சொல்லவில்லை நாமக்கல் கவிஞர் அவர்கள் .திருவள்ளுவரை திருக்குறளை தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடாது என்கிற காரணத்தினால் குறை நிறைகளை ஆழ்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார் இந்த புத்தகத்தில் நாமக்கல் கவிஞர் அவர்கள் .
திருக்குறளை மேலோட்டமாக படித்திருக்கிறேனே ஒழிய ஆழ்ந்து
படிக்கவில்லை திருக்குறளில் முனுசாமி போலவோ கலைஞரை போலவும் இன்னும் பெற தமிழ் அறிஞர்களைப் போலவோ திருக்குறளை நான் படித்ததில்லை நாமக்கல் கவிஞர் அவர்கள் சொல்லுகின்ற வார்த்தைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அவர் பக்கம் நியாயம் தெரிகிறது அதனை மறுத்து யாரேனும் சொல்லி இருந்தால் அதை படித்தால் யார் பக்கம் நியாயம் என்று என்னால் சொல்ல முடியும் .இந்த நிலையில் பரிமேலழகரின் கூற்று நாமக்கல் கவிஞரால் சுட்டிக்காட்டப்படுவதை படித்து மகிழ்கிறேன் .
வினை என்று ஒரு சொல் .அதற்கு செயல் என்று அர்த்தம் கொள்ளலாம் .ஓரிடத்தில் பரிமேலழகர் போர் என்று அர்த்தம் கொண்டு அந்த குறள்க்கு அர்த்தம் சொல்லுகின்ற வகையில் தவறு நேர்ந்து விட்டதாக நாமக்கல் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு அதிகாரத்தில் உள்ள 10 குறள்களில் ஒரு குறளில் உள்ள வினை என்ற சொல்லுக்கு போர் என்று அர்த்தம் கற்பித்ததை மறுக்கிறார் நாமக்கல் கவிஞர் .இது போலவே இன்னும் இரண்டு மூன்று குறள்களில் ஒப்பிட்டு காட்டுகிறார் நாமக்கல் கவிஞர்.
மெத்த படித்தவர்கள் தான் இது குறித்து சொல்ல வேண்டும். நான் படித்தேன் சுவைத்தேன் அவ்வளவுதான் .என்னால்
என்ன சொல்ல முடியும்.
 
-திரு.நா.கருணாமூர்த்தி , (முகநூல் பதிவு )
 
by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.