LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது எப்படி?

தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகம், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமென தமிழர்கள் வந்துள்ளனர். கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன்.இதுவரை, "உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, "உலகத் தமிழ் மாநாடுகள்!' இப்போது நடப்பது, "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!'

உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை. தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், "ஞால முதல்மொழி தமிழே' என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.மூலத் தாய்மொழிச் சொற்கள் உலகமொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன.

தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலை தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என, அறியலாம்கி.மு., 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழக கப்பல்கள் மயில் தோகையையும், யானை தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன. வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார்.

இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை, அறியலாம். வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட முவேந்தர்களை பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது.கி.மு., 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலை பற்றி குறிப்பிடுகிறார். கி.மு., 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியனார் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

பாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்க படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார்.பாரதப்போர் நடந்த காலம் கி.மு., 1500 எனப்படுகிறது. அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு., 1500 ஆக இருக்க வேண்டும். இவை அனைத்தும் தமிழ் இனம், தமிழ் மொழியின் தொன்மையை புலப்படுத்துகின்றன. பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், "திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்' எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர்.

"சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்' என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளி பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார். இன்று, "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெறும் பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலோ, "சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை' என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாக கூறியிருக்கிறார். அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது.தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாக பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தனர்.தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது.

தமிழகத்துக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் முசிறித்துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று.அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழி.இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

தமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.அயர்லாந்து நாட்டில், "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரை வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ்ச் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் குரல் கொடுத்தன.

தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச.அகத்தியலிங்கம், வா.செ.குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர். எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலும், ஐ.மு., கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 2004, அக்., 12ல் தமிழ்ச் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்கு பிறகு, நடக்கும் முதல் மாநாடு இது. இதனால்தான் தமிழின் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடக்கிறது.ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் கொடுங்கல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அதன் காரணமாகவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.