LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் கதைகள் - Thirukkural Stories

சாமந்தி பூ - திருக்குறள் கதைகள் - குறள் 1

முன்னுரை

133 அதிகாரங்களில், முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கொஞ்சம் சிக்கலான அதிகாரம். பல கருத்துகளும், முரண்பாடுகளும்; திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும், சமயத்துக்கும் அதிகமாக உண்டு. இப்படிப்பட்ட சூழலில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்திற்குக் கதை எழுதும் மிகப்பெரும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். இதில் எனக்கு மகிழ்ச்சியும் கூட.. 

 

எனது பார்வையில் கடவுள் என்பவர் யார்? இந்த உலகை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது; உருவாக்குகிறது. அந்த சக்தி இல்லையேல், இந்த உலகம் இல்லை. இந்த உலகத்திற்கு வெளிச்சம் தருவது எது? சூரியன். அந்தச் சூரியன் எவ்வாறு உருவானது? பல வாயுக்களால் உருவானது. அந்த வாயுக்கள் எவ்வாறு உருவானவை? அவை எந்த ஆண்டு உருவானவை? என்று பல கேள்விகள் இன்றைய அறிவியல் அறிஞர்களின் மத்தியில் நிலவுகிறது. 

 

பல கேள்விகளுக்கு அவர்கள் விடை கண்டுபிடித்து விட்டனர். ஆனால், ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் விடை இன்னும் கண்டறியப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது, அந்த விடை தெரியாத கேள்விதான். கேள்விகளுக்கு விடை தெரிந்து விட்டால் அது அறிவியல். விடைதெரியாவிட்டால் அது கடவுள். இந்த உலகை ஏதோ ஒரு சக்தி ஆட்டி வைக்கிறது. அந்த சக்திதான் நம் அனைவரையும் இயக்க வைக்கிறது. அந்த சக்தியை மையப்பொருளாகக் கொண்டு, நான் இந்தக் கதைகளை எழுதியுள்ளேன். 

 

எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையோ, கடவுளையோ நான் இங்குக் குறிப்பிடவில்லை. மனிதர்களின் வாழ்க்கையில் அவசியமாக கடைபிடிக்கப்பட வேண்டிய குணங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நெறிகள் இவற்றையே நான் இங்குக் கடவுளாக பாவித்துள்ளேன். அவற்றை மையமாக வைத்தே, இந்தக் கதைகளை நான் எழுதியுள்ளேன்.

குறள் - 0001

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

பொருள்:

எழுத்துக்கள் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

 

"சாமந்திப் பூ"

 

"ஏ மலர்க்கொடி, என்ன பண்ணிட்டு இருக்க? எவ்வளவு நேரமா உன்னக் கூப்பிட்டு இருக்கேன். கூப்பிட்டா உடனே வர மாட்டியா? "என்று அந்தத் தெருவெங்கும் தன்னுடைய குரல் கேட்கும் அளவு கத்தினாள் மாலா. 

"தோ.. வந்துட்டு இருக்கேன் மா, நான் என்ன இயந்திரமா? சொன்ன உடனேயே வந்து நிக்க! குடத்தை எடுத்துக்கிட்டு வர வேணாமா? " என்று தன் தாய்க்கு நிகராகக் கத்திக்கொண்டே வந்தாள். 

25 நாட்களுக்கு ஒரு முறை தான் அவர்கள் இருக்கும் கிராமத்தில் தண்ணீர் வரும். அடுத்த 25 நாட்களுக்கு அந்தத் தண்ணீரை வைத்து தான் அவர்கள் வாழ வேண்டும். அதனாலேயே அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இப்போது நாம் வாழும் காலத்தில், குழாய் அடிச் சண்டை என்பது இல்லை. ஏனென்றால் அவர்கவர்களுடைய வீட்டில் தண்ணீர் வரும். இப்பொழுது பல வசதிகள் உள்ளன. 

ஆனால், அப்பொழுதெல்லாம் இல்லை. அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி தான் தண்ணீர் பிடித்து வரவேண்டும். அந்தத் தண்ணீர் பிடிக்கும் இடத்தில்தான், இவ்வுலகக் கதையே ஓடிக்கொண்டு இருக்கும். நமக்கு இருக்கின்ற ஒவ்வொரு சந்தேகங்களையும், அந்தக் குழாயடிக்குப் போனால் தெரிந்து கொள்ளலாம். அந்த ஊரின் ஒட்டுமொத்த இரகசியங்களும், அங்கு தான் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கும். 

வேக வேகமாக குடத்தை எடுத்துக் கொண்டு வந்தாள் மலர். அப்படி ஒரு கருமையான உருவம். இடுப்பு வரை அடர்த்தியான கூந்தல். சிரித்தால் பல் மட்டுமே நன்றாகத் தெரியும். நல்ல ஒரு மஞ்சள் நிறத்தில், தாவணியைப் போட்டுக்கொண்டு குடத்தோடு ஓடி வந்தாள் மலர். அவர்களுக்கு முன்பு 10 பேர் தண்ணீர் பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டு இருந்தார்கள். 

"ஏன்மா, அதான் பத்துப் பேர் இருக்காங்கல்ல, இப்பவே வர சொல்லி ஏன் அவ்வளவு அவசரப் படுத்துற? எப்படி ஓடி வந்தேன் பார்த்தியா? கீழே விழுந்தா என்ன ஆகி இருக்கும்? என்ன அவசரப்படுத்தறதுல உனக்கு அவ்ளோ ஒரு சந்தோசம்" என்று மலர் தன் தாயிடம் வாதாடினாள். 

"இவ்வளவு நேரமா கூப்பிட்டு, நீ இப்பதான் வந்திருக்க. 20 பேர் இருக்கும்போதே உன்னைக் கூப்பிட்டேன். 10 பேர் முடிஞ்சுதா நீ வந்திருக்க. இப்பயும் கூப்பிடலனா, அப்புறம் நம்ம தண்ணி பிடிக்கும் பொழுது நீ வந்திருக்கவே மாட்ட. தண்ணியும் கிடைச்சிருக்காது. தேவையில்லாம பேசாம, வந்து வரிசையில் நில்லு. ஒழுங்கா தண்ணிய புடிச்சிட்டு வா. நான் போயிட்டு மதியத்துக்குச் சமைக்கிறேன். இந்த அஞ்சு குடத்துலயும் புடிச்சுட்டு வந்துரு" என்று அவள் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். 

அந்த ஊரில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை குடிசை வீடுகள் மட்டும் தான் இருக்கும். அந்தக் குடிசை வீடுகளும் ஆங்காங்கே இடிந்து போய், ஓட்டை வீடுகளாக தான் இருக்கும். அதோடு மேல் பகுதி மட்டும் கூரையிலும், சுற்றிலும் மண்ணால் மட்டுமே சுவரினை எடுத்து இருப்பார்கள். ஒரு ஒழுங்கு இல்லாத வரிசை அமைப்பைக் கொண்டிருந்த வீடுகளாக அந்தக் கிராமம் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. வெறும் கால் சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு, காலில் செருப்பு கூட இல்லாமல், உடல் முழுவதும் புழுதியுடன், ஆங்காங்கே சக்கரத்தைத் தான் வைத்திருக்கும் குச்சியால் அடித்து ஓட்டிக்கொண்டு விளையாடும் சிறுவர்கள், மா மரம், புளியமரம் என்று மரங்களில் ஊஞ்சலைக் கட்டிக் கொண்டு விளையாடும் சிறுமிகள் என்று எப்போதும் கும்பலாகவே அந்த ஊர் காட்சியளிக்கும். 

அந்த ஊரில் அப்பொழுது திருவிழா வைக்க ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு. திருவிழா என்றாலே அந்த ஊரில் இருக்கின்ற பெண்கள், தனது கூந்தல் முழுக்க மஞ்சள் நிறத்திலான சாமந்திப் பூவை தைத்துக் கொள்வார்கள். முடியே அவர்களுக்கு வெளியே தெரியாது. தலையில் இருந்து, தனது முடியின் இறுதிப் பகுதி வரை அந்த மஞ்சள் பூவை கோர்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் வித்தியாசமான அலங்காரம் தான். ஆனால் அவ்வாறு கோர்த்துக் கொள்வதில் அந்தப் பெண்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அனைவரும் அந்தப் பூவை கோத்துக்கொண்டு, அந்தக் கிராமத்தின் கோவிலுக்கு முன்பு, திருவிழாவின் மூன்றாம் நாள் அன்று, கும்மியடித்து விளையாடுவது வழக்கம். திருவிழா என்று பேச்சு தொடங்கினாலே, அனைவரும் அந்தப் பூவை தனது தலையில் கோத்துக் கொள்வார்கள். அதுபோலதான் மலர்க்கொடியும் அங்கு நின்று கொண்டு இருந்தாள். வயோதிகர்களைத் தவிர, மஞ்சள் நிறத் தாவணி, மஞ்சள் நிறப் பூ தலை முழுவதும், கருப்பான உருவம் என்று தண்ணீருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் அந்த மலர்க்கொடி. அப்பொழுது வேகமாக ஒரு குதிரை வண்டி வந்தது. அங்கிருந்து ஒரு பெண் இறங்கினாள். ஒரு பளிங்கு போன்ற கால் ஒன்று தெரிந்தது. அந்தக் காலை அலங்கரிக்கும் வண்ணம் அழகிய கொலுசு இருந்தது. காலணியோடு அந்தக் கால் குதிரை வண்டியில் இருந்து இறங்கியது. பேரழகு. அந்த அழகை வர்ணிக்கவே முடியாது. உடல் முழுவதும் பளிங்கு நிறத்தில் வெண்மையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்மணி. பெயர் குணவதி. பெயருக்கு அப்படியே எதிரானவள். 

பெயரில் மட்டுமே குணம் இருக்கும். அந்த ஊரில் அவளுக்கு வைத்த பெயர் முனியம்மா. பட்டணத்திற்குப் படிக்க சென்றதால், தனது பெயரை இவ்வாறு மாற்றிக் கொண்டாள். குதிரை வண்டியில் இருந்து இறங்கினாள். அங்கு இருக்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள். அனைத்துப் பெண்களும் தலையில் வைத்திருக்கின்ற பூவையும் பார்த்தாள். "என்ன, ஏன் எல்லாரும் பூவை இப்படி வச்சிருக்காங்க? நல்லாவா இருக்கு?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். ஏனோ தெரியவில்லை அவளுடைய பார்வை மலர்க் கொடியின் மீது பட்டது. ஏளனமாக ஒரு பார்வை பார்த்தாள். மலர் கொடியோ அவளுடைய அழகில் மயங்கிப் போய் நின்று கொண்டிருந்தாள். "அம்மாடியோ, என்னாமா ஜொலிக்குது இந்தப் பொண்ணு" என்று யோசித்துக்கொண்டு இருந்தாள். அவளுக்குத் தெரியவில்லை தமிழர்களின் உண்மையான அழகே நாவல் பழ நிறம் தான் என்பது. அந்த ஊரைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். 

"இது என்ன, இந்த ஊர் இப்படி இருக்கு, ஒரே மண்ணும், புழுதியுடனும், எல்லாரும் இப்படி புழுதியோட சுத்துறாங்க, கொஞ்சம் கூட நாகரிகமே தெரியாதா? நான் பட்டணத்திலேயே இருந்திருக்கலாம்" என்று நொந்து கொண்டாள். 

அந்த மக்களை எல்லாம் ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் தன்னுடைய குதிரை வண்டியில் ஏறிச் சென்று விட்டாள். அந்த மக்கள் அவளை ஏதோ ஒரு அதிசயமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். பிறகு தான் தண்ணீர் பிடிக்க வேண்டிய அந்த நேரம் வந்துவிட, 5 குடத்திலும் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு, இரண்டு குடமாகவும், பிறகு இரண்டு இடுப்பிலும், தலையிலும் என்று மூன்று குடங்களையும் தனது வீட்டை நோக்கி எடுத்துச் சென்றாள் மலர்க்கொடி. 

 

"அம்மா, யாருமா அந்தப் பொண்ணு? அந்தக் குதிரை வண்டியில் போது பாரு, எப்பா, என்னாமா தகதகன்னு மின்னுது! இறங்குச்சு, எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்துச்சு, போயிடுச்சு? " என்று மலர் கேட்டாள். 

 

"அதா, அந்தப் பொண்ணு இந்த ஊரு நாட்டாமையோட பொண்ணு. பட்டணத்தில் இருந்து இன்னைக்கு தான் வருது. எட்டு வயசு இருக்கும் போது கிராமத்தை விட்டு போச்சு. இப்ப 20 வயசுல வந்துருக்கு" என்றாள் அவள் அம்மா மாலா. 

 

"ஓ, அந்த முனியம்மா வா? என்கூட சின்ன வயசுல கண்ணாமூச்சி எல்லாம் விளையாடுமே, வாழைத்தோப்பு, சோளக்காடுன்னு, நாங்க சுத்திக்கிட்டு இருப்போமே! என்கிட்ட கூட ஒரு நாளு டாட்டா காமிச்சிட்டு போச்சு, அதுவா இது? இப்ப அடையாளமே தெரியல. இப்படி மாறிடுச்சு" என்றாள் மலர்க்கொடி. 

 

அவள் தாய் சிரித்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள். மலர்க்கொடியும், தனது அடுத்த கட்ட வேலைகளில் மூழ்கிப் போனாள். 

 

திருவிழா தொடங்கியது. கோலாகலமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மகிழ்ச்சியாக, இவ்வுலகை உருவாக்கிய இறைவனை வழிபட்டனர். 

 

அந்த ஊரில் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அங்கே மதம், சாதி, உன் கடவுள், என் கடவுள்னு பேசுறது இல்லை. அவரவர்களின் விருப்பம் போல, அவரவர்களின் கடவுளை வழிபடலாம். அந்தக் கிராமத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும், தங்களின் இஷ்டக் கடவுள்களை வழிபடுவார்கள். அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வைத்து வழிபடுவது தான், அந்த ஊரின் சிறப்பு. 

 

ஆதலால் இந்து, கிறிஸ்டியன், இஸ்லாம், சமணம், பௌத்தம் என்று பல மதங்களைச் சேர்ந்த மக்களும், அனைத்துக் கடவுள்களும் அங்கு இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் எதிர்மறையாக இருக்கும், கடவுள் மறுப்பாளர்களும் இருந்தார்கள். பலதரப்பட்ட கொண்டாட்டங்களாக திருவிழா நடைபெற்றது. 

 

அனைவரும் எதிர்பார்த்த அந்த மூன்றாவது நாள் வந்தது. பெண்கள் தங்களுடைய தலையில் மஞ்சள் பூவை வைத்து தைத்துக்கொண்டு, கும்மியடிக்கத் தயாராகினர். முனியம்மா என்ற தற்போதைய குணவதி, அதனை விசித்திரமாகப் பார்த்தாள். தன் தந்தையிடம் கேட்டாள். "ஏன் இந்த ஊரில் பெண்கள் இப்படி? ஏன் பா இந்த ஊர்ல பெண்கள் எல்லாரும் தன் தலைல இப்படி சாமந்திப் பூவ வச்சிட்டு இருக்காங்க? " என்று கேட்க, "இந்த ஊரில், வழக்கம்மா திருவிழா அப்போ பெண்கள் இது மாதிரி தன்னுடைய தலையை அலங்கரித்துக் கொள்வது வழக்கம்" என்று சொன்னார். 

 

அதிசயமாக பார்த்தாள் குணவதி. அனைத்துப் பெண்களின் கூந்தலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைவரும் ஒன்றாகத் திரண்டு கும்மி அடிக்கத் துவங்கினார்கள். 

 

"கும்மியடி பொண்டுகளா, கும்மியடி. 

குறைகள் தீர கும்மியடி. 

கும்மியடி கும்மியடி இந்த ஊரு சிறக்க கும்மியடி, 

இந்த மக்க சிறக்க கும்மியடி, 

மகிழ்ச்சி பொறக்க கும்மியடி, 

கும்மியடி பொண்டுகளா கும்மியடி"

 

 என்று அந்த ஊரில் இருந்த ஒரு மூதாட்டி, கும்மிப் பாடலைப் பாட, வரிசையாகக் கும்மியடித்தனர் பல பெண்களும், சிறுமிகளும். அவை அனைத்தையும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் குணவதி. 

 

திருவிழா முடிந்தது. இந்தக் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று சாலையில் நடந்து சென்றாள். அப்பொழுது "ஏ முனியம்மா, நல்லா இருக்கியா? என்ன ஞாபகம் இருக்கா? நாலு வயசுல அந்த வாழத் தோப்புல கண்ணாமூச்சி விளையாடுவோமே, நான் தான் மலரு" என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்து, குணவதையின் கையைப் பிடித்தாள். கையைப் பிடித்த அடுத்த நிமிடமே, "வாட் நான்சென்ஸ்" என்று சொல்லி கையை உதறிவிட்டாள். 

 

"டோன்ட் யு ஹேவ் சென்ஸ்? ப்லட்டி கேர்ள், ஹௌவ் கேன் யூ டச் மீ? பி இன் எ லிமிட், நான்சென்ஸ்" என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள். மலர்க்கொடி அந்தக் கிராமத்தின் பள்ளிக்கூடத்திலேயே 12 ஆம் வகுப்பு வரை படித்தவள். அதற்கு மேல் படிக்கவில்லை என்றாலும், ஆங்கில மொழியில் அவள் புலமை இல்லாமல் இல்லை. அவள் சொன்ன அனைத்திற்கும் அவளுக்கு அர்த்தம் புரிந்தது; அதிர்ச்சியாக இருந்தது. 

 

"நாம இப்ப என்ன பண்ணோம்? அவளோட கையை தானே புடிச்சோம்! அதுக்கு எதுக்கு இப்படி பேசிட்டு போறா? தான் அழகா இருக்கோம், நிறைய படிச்சிருக்கோம்ங்கற திமிரு, சரி அவ எப்படியோ இருந்துட்டு போகட்டும், நமக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்" என்று சொல்லிக்கொண்டு தன் வீட்டை நோக்கிச் சென்றாள். 

 

"இது என்ன! இந்தக் கிராமத்தில் இருக்கிற வீடு எல்லாம் இப்படி இருக்குது? இந்தச் சின்னச் சின்ன குடிசை வீட தவிர இந்தக் கிராமத்தில் எதுவும் இல்லை. இதுல போய் என்னத்த சுத்திப் பார்க்க! " என்று சொல்லி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தாள். தான் இருக்கும் வீட்டையும் பார்த்தாள். அங்கு இருக்கும் மற்ற வீடுகளையும் பார்த்தாள். தனது வீடு அரண்மனை போல இருந்தது. அந்தத் கிராமத்தில் இருப்பவர்களினுடைய ஒவ்வொரு வீடும், இவர்களுடைய வீட்டிற்கு ஈடாகாது. மனதில் பெருமிதம் கொண்டாள். 

 

அங்கு மக்கள் அருந்தும் உணவுகளைப் பார்த்தாள். அனைவரும் "கம்மங்கூழ், கேழ்வரகுக் களி, பச்சை மிளகாய், பருப்புக் குழம்பு என்று அந்த மண்ணில் விளைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள். ஆனால், அவளோ பீட்சா, பிரட்டு, பர்கர் என்று வெளிநாட்டு உணவுகளைத் தயார் செய்து உண்டாள். அவளுக்கு ஒரே பெருமிதம். "இந்த ஊரிலேயே நாம தான் உயர்ந்தவங்க. நம்மள மிஞ்சின சக்தி இந்த ஊர்ல இல்ல, பணத்திலும், செல்வத்துலயும் செல்வாக்குலயும் நாமதான் உயர்ந்தவங்களா இருக்கோம். மத்தவங்க எல்லாம் நம்ம கால் தூசுக்குக் கூட வர மாட்டாங்க" என்று நினைத்துக் கொண்டு ஆணவமாக நடந்து கொண்டாள் குணவதி. 

 

ஒருநாள் நள்ளிரவு நேரம், குணவதியின் வீட்டில் மிகப்பெரும் அழு குரல் கேட்டது. அவளுடைய தந்தைக்கு மாரடைப்பு. என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியவில்லை. அந்தத் கிராமத்தில் ஒரு மருத்துவமனை கூட இல்லை. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால், நான்கு கிராமங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஒரு பேருந்து வசதி கூட இல்லை. திகைத்துப் போனாள். அவளுடைய வீட்டில் கார் இருக்கிறது. ஆனால் அந்தக் காரை ஓட்டும் டிரைவர் அந்த நேரத்தில் இல்லை. எப்பொழுதும் ஒட்டும் அப்பாவுக்கும் நெஞ்சு வலி, என்ன செய்வது? " என்று திகைத்துப் போய் நின்றாள். அப்பொழுது அக்கம் பக்கம் இருந்த அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்தனர். 

 

அவர்கள் தன்னுடைய வீட்டிற்குள் வருவதைப் பார்த்ததும், "ஸ்டாப்பிட், ஒய் டு யூ என்டர் அவர் ஹோம்? ஹௌவ் டர்ட்டி! கோ அவுட், யு ஆர் நாட் அலொவ்ட் இன் அவர் ஹோம். யூ டோன்ட் ஹாவ் ரைட்ஸ், டு என்டர் அவர் ஹோம். கீப் டிஸ்டன்ஸ். ஐ ஹேவ் கால்டு ஆம்புலன்ஸ். வித்தின் எ மினிட், இட் வில் அரைவ் ஹியர். கோ, அண்ட் டு யுவர் வொர்க், கீப் டிஸ்டன்ஸ்" என்று சொல்லி அனைவரையும் விரட்டினாள். 

 

அந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் மலர்க்கொடிக்கு நன்றாகப் புரிந்தது. உடனே மலர் வந்தாள். "இங்கப் பாரு முனியம்மா, ஓ.. நீ பழைய முனியம்மா இல்லல்ல.. சரி இங்க பாரு குணவதி, எல்லாத்தையும் விட இப்ப ரொம்ப முக்கியம் ஐயாவோட உயிர் தான். அதை முதல்ல பாரு. ஆம்புலன்ஸ் வர மாதிரி வரட்டும். நம்ம பாதி தூரம் தூக்கிட்டு போவோம். அது அப்பாவ சீக்கிரமா மருத்துவமனையில் அனுமதிக்க உதவியா இருக்கும்" என்று சொல்ல 

 

"ஷட்டப் ஸ்டுப்பிட், கோ அவுட்" என்று சொல்லி விரட்டி அடித்தாள். மலர்க்கொடிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவசர ஊர்தி வரும் வரும் என்று எட்டி எட்டி பார்த்தாள். வரவே இல்லை. அவளுக்குப் பயம் வந்துவிட்டது. அப்பாவினுடைய நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த மக்களை வேற நாம் இவ்வாறு சொல்லிவிட்டோமே என்று வருந்தினாள். 

 

இறுதியாக தனது பொறுமையை இழந்த அந்த மக்கள், "இங்க பாருமா குணவதி, ஐயா எங்களுக்கு அவ்வளவு பண்ணி இருக்காரு. இன்னைக்கு மூணு வேளை சோறு சாப்பிடுவதே, ஐயாவால தான். எங்க கிராமம் சின்ன கிராமமா இருக்கலாம். பெரிய வீடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த ஒரு இடையூறும் இல்லாம, இங்க நாங்க சுதந்தரமா இருக்கோம், எங்களுக்கு ஒன்று என்றால், ஐயா ஓடி வந்து உதவி செய்யுவாறு. இன்னைக்கு அவருக்கு ஒரு பிரச்சனை அப்படிங்கறப்ப, எங்களால வேடிக்கை பார்க்க முடியாது. நீ தள்ளி நில்லுமா" என்று சொல்லி குணவதியைத் தள்ளிவிட்டு, நாட்டாமையை தூக்கிக் கொண்டு மருத்துவமணையை நோக்கி விரைந்து ஓடினர்.

 

ஆனால் காலம் சதி செய்து விட்டது. சிறிது தூரத்திலேயே அவருடைய உயிர் அவரை விட்டுப் பிரிந்தது. தனது தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும், "அப்பா" என்று சொல்லி கத்திக்கதறி அழுதாள் குணவதி. அப்பொழுதுதான் அங்கு இருப்பவர்களுக்கு தெரியும் "ஓ இந்தப் பொண்ணுக்கு நம்ம தமிழ் மொழி கூடத் தெரியும் போல" என்று. 

 

"அப்பா என்னை விட்டுப் போயிட்டீங்களே, உங்களை நானே கொன்னுட்டேனே" என்று சொல்லி கதறி அழத் துவங்கினாள். என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக் கதறி அழுது கொண்டு இருந்தாள். அந்த ஊர் மக்கள் செய்வது அறியாமல் நின்று போனார்கள். அவளுடைய அழுகை ஒலி அந்தக் கிராமம் முழுக்க ஒலித்தது. அவள் அழைத்திருந்த ஆம்புலன்ஸ் அப்பொழுது வந்து சேர்ந்தது. அதிலிருந்து மருத்துவர்கள் இறங்கினார்கள். இறந்து போன அவரின் உடலைப் பார்த்தார்கள். இருந்தாலும் ஒரு முயற்சியைச் செய்து பார்ப்போம் என்று ஒரு மருத்துவக் கருவியை எடுத்து, அவருடைய இதயத்திற்கு நேராக வைத்து அழுத்தினார்கள். அழுத்தி அழுத்தி எடுத்தார்கள். அவரிடம் இருந்து மூச்சுக்காற்று வரவே இல்லை. நின்று போன அந்த இதயத்தைத் துடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். முடியவே இல்லை. இறுதியாக அந்த ஊர் மக்கள் "ஐயா எங்களுக்காக எழுந்து வாருங்கள் ஐயா! " என்று சொன்ன அந்தப் பொழுதில், அந்த மருத்துவர் அந்த மருத்துவ கருவியை அவருடைய இதயத்தில் வைத்து அழுத்தி, இதயத்தைத் துடிக்க வைக்கும் முயற்சி செய்ய, இறுதியாக அவருடைய மூச்சு, மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்தது. பெருமூச்சு விட்டு கண்விழித்தார். 

 

அவருடைய கண்கள் திறந்தன. இதயம் துடித்தது. அடங்கிப் போக இருந்த அவருடைய உயிர் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்தது. மூச்சினை வரவழைத்த நம்பிக்கையுடன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். குணவதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்பொழுது இங்கே என்ன நடந்தது என்று யோசித்துப் பார்த்தாள். அனைவரும் மருத்துவமனையை நோக்கி ஓடினார்கள். நாட்டாமை நலமுடன் இருக்கிறார். தனது தந்தை நலமாக இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள் குணவதி. அந்த மருத்துவரோ குணவதியை இல்லாத வார்த்தைகளால் திட்டி விட்டார். 

 

"ஏன்மா உனக்கு அறிவு இல்லையா? இந்த ஊர்ல தான் மருத்துவமனை இல்லன்னு தெரியும்ல, அப்பாவுக்கு இப்படி ஆன உடனே அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்களோட உதவியோட நீ கொஞ்ச தூரம் வந்திருந்தால் என்னம்மா? அந்த ஊர் மக்களையும் தூக்கக்கூடாது வெளியே போங்கண்ணு சொன்னியாமே, அப்படி என்ன இந்த மக்கள் உனக்குக் கெடுதல் பண்ணிட்டாங்க? அப்படி என்ன உனக்கு இவங்க எல்லாம் சாதாரணமாகப் போயிட்டாங்க? ஐயா எவ்வளவு நல்லவர். அவருக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறத நினச்சு எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. 

 

"ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ, இந்தப் பணம், காசு எல்லாம் இன்னிக்கு ஒருத்தர்கிட்ட இருக்கும். நாளைக்கு ஒருத்தர் கிட்ட போகும். எதுவும் நிரந்தரம் இல்லை. அதெல்லாம் இருக்கிறவங்க தான் இந்த உலகத்துல முதன்மை என்று சொல்லிவிட முடியாது. நம்ம எல்லாத்துக்கும் மேல, இந்த உலகத்தையும் நம்மளையும் படைச்ச இறைவன் இருக்கிறான். அவன் தான் முதன்மையானவன். அவன் நினைத்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம். பார்த்துப் புரிஞ்சு நடந்துக்கோ. இனிமேயாவது மனிதத் தன்மையோடு நடந்துக்கோ" என்று சொல்லி திட்டி விட்டுச் சென்றார். 

 

உடனே அங்கு மலர் சென்றாள். அப்பா இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் "அப்பா"ன்னு சொல்லி அழுதியே, அப்ப எங்க போச்சு அந்த அந்நிய மொழி? உன்னோட ஆங்கிலம் எங்களுக்குலாம் தெரியாதுன்னு நினைக்கிறியா? உன்னைய விட எங்களுக்கு நிறைய தெரியும். ஆனா நம்மளோட அறிவுங்கிறது வேற, பண்புங்கிறது வேற ,ஆயிரம் தான் இருந்தாலும் உணர்ச்சிகள் என்று வரும் பொழுது நம்மளோட தாய் மொழி தான் நமக்கு முதன்மையா வந்து நிற்கும். மற்ற மொழிகள் எல்லாம் இருக்கிற இடம் தெரியாம போயிடும். உனக்கு அழுகை என்று வந்தப்ப உன் வாயில வந்த வார்த்தை "அப்பா" தான். நம்ம மொழி தான் வந்தது. ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ குணவதி, "இந்த உலகத்திலேயே எல்லா மொழிகளுக்கும் தாய் "தமிழ் மொழி" தான். அகரம் தான் அனைத்து எழுத்துகளுக்கும் முதன்மையானது. அதே மாதிரி இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றிற்கும் முதன்மையானது இறைவன் தான். அதுக்கு அப்புறம் தான் நம்ம எல்லாம். இனிமேயாவது உன் பேருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் குணத்தோடு நடந்துக்கோ. ஐயாவுக்குத் தேவையான மருந்து, மாத்திரை எல்லாம் எழுதிக் கொடுத்து இருக்காங்க. இதை வாங்குவதற்குத் தேவையான பணம் எங்ககிட்ட இருக்கு. நீ கொடுக்க வேண்டாம். நான் போய் வாங்கி வரேன். சின்ன அக்காவும், செல்லம்மாவும் மதிய சாப்பாடு சமைத்து எடுத்துட்டு வருவாங்க. நீ எதுக்கும் கவலைப்படாம இரு" என்று சொல்லிவிட்டுச் சென்றாள் மலர்க்கொடி. திகைத்துப் போய் நின்றாள் குணவதி. இவ்வளவு நாளாக இவ்வளவு ஆணவமாக இருந்து விட்டோமே என்று அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது. 

 

எழுத்துகளுக்கெல்லாம் முதல் எப்படி அகரமோ, அது போல் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துக்கும் முதல் இறைவனே" என்று. இந்த உலகை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது. அந்த சக்தி தான் கடவுள். அதுவே முதன்மையானது. ஆனால் நாம் தான் அனைத்திலும் முதன்மை என்று நினைத்துக் கொண்டிருந்தோமே…. என்று நினைத்து திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள் தனது தந்தையின் அருகில், குணவதி. 

 

தான் திமிராக இருந்தாலும், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாத அந்த மக்களின் குணமே, அவளுக்குக் கடவுளாகத் தெரிந்தது. 

by Vinothini S   on 06 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.