LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
-

கொலோசையருக்கு எழுதிய திருமுகம்

1. அதிகாரம்

கொலோ. 1:1 கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாகிய வாழும் நகர இறை மக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது:

கொலோ. 1:2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக.

கொலோ. 1:3 உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

கொலோ. 1:4 கிறிஸ்து இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம்.

கொலோ. 1:5 இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்கு பற்றி அறிந்து கொண்டீர்கள்.

கொலோ. 1:6 உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப்பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணாந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது.

கொலோ. 1:7 எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர்.

கொலோ. 1:8 தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர் தாம் எங்களிடம் எடுத்துரைத்தார்.

கொலோ. 1:9 எனவே நாங்கள் இச்செய்தியைக் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப்பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும்.

கொலோ. 1:10 நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையர்வளாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும்.

கொலோ. 1:11 நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும். மகிழ்ச்சியோடு

கொலோ. 1:12 தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.

கொலோ. 1:13 அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.

கொலோ. 1:14 அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.

கொலோ. 1:15 அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு.

கொலோ. 1:16 ஏனெனில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை கட்வுலனாகுபவை கட்புலனாகாதவை அரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோர் ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

கொலோ. 1:17 அனைத்துக்கும் முந்தியவர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

கொலோ. 1:18 திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்.

கொலோ. 1:19 தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார்.

கொலோ. 1:20 சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

கொலோ. 1:21 முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்: அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்ச் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள்.

கொலோ. 1:22 இப்பொழுது நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

கொலோ. 1:23 நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.

கொலோ. 1:24 இப்பொழுது உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்.

கொலோ. 1:25 என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

கொலோ. 1:26 நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொலோ. 1:27 மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்.

கொலோ. 1:28 கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழுஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

கொலோ. 1:29 இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்தி பாடுபட்டு உழைக்கிறேன்.


2. அதிகாரம்


கொலோ. 2:1 உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்றனைவருக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

கொலோ. 2:2 என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்: அந்த அறிவுத் திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம்.

கொலோ. 2:3 ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.

கொலோ. 2:4 திறமையாக வாதாடி எவரும் உங்களை ஏமாற்றிவிடக்கூடாதென்றே நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கொலோ. 2:5 உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தில் உங்களுடன் இருக்கிறேன். உங்களிடையேயுள்ள ஒழுங்கு முறையையும் உறுதியான நம்பிக்கையையும் கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

கொலோ. 2:6 கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.

கொலோ. 2:7 அவரில் வேருன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்.

கொலோ. 2:8 போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல மனித மரபுகளையும் உலகின் பஞ்சபூதங்களையும் சார்ந்தவை. அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள்.

கொலோ. 2:9 இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருகில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது.

கொலோ. 2:10 அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள். ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.

கொலோ. 2:11 நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல: கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள்.

கொலோ. 2:12 நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.

கொலோ. 2:13 உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்.

கொலோ. 2:14 நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.

கொலோ. 2:15 தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஆவலமாக இழுத்துச் சென்றார்.

கொலோ. 2:16 எனவே உண்பது குடிப்பது மற்றும் திருவிழா அமாவாசை ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் குறைகூற வேண்டியதில்லை.

கொலோ. 2:17 இவை எல்லாம் வர இருந்தவற்றின் வெறும் நிழலே: கிறிஸ்துவே உண்மை.

கொலோ. 2:18 போலித் தாழ்மையையும் வான யூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க இடம்கொடாதீர்கள். அவர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகப் போக்கிலான சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொள்கிறார்கள்.

கொலோ. 2:19 அவர்கள் தலையாயிருப்பவரைப் பற்றிப் பிடித்து கொள்ளவில்லை. அவரால்தான் முழு உடலும் தசைநார்களாலும் மூட்டுகளாலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்றுக் கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளருகிறது.

கொலோ. 2:20 கிறிஸ்துவோடு இறந்து நீங்கள் உலகின் பஞ்சபூதங்களிலிருந்து விடுவிக்கப் பட்டீர்கள் அல்லவா.

கொலோ. 2:21 இன்னும் ஏன்"தொடாதே""சுவைக்காதே""தீண்டாதே" எனச் சொல்லும் உலகப்போக்கிலான விதிமுறைக்குட்பட்டவர்கள் போல் வாழ்கிறீர்கள்?

கொலோ. 2:22 பயன்படுத்தும்போது அழிந்துபோகும் பொருள்கள் பற்றியவை அவ்விதிகள். அவை மனிதர் உருவாக்கின் கட்டளைகளும் போதனைகளுமோ.

கொலோ. 2:23 மனிதர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட வழிபாடுகள் போலித் தாழ்மை உடல் ஒறுத்தல் ஆகிய போதனைகள் ஞானமுள்ளவைபோல் தோன்றுகின்றன. ஆனால் அவை இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படா.


3. அதிகாரம்

கொலோ. 3:1 நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

கொலோ. 3:2 இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.

கொலோ. 3:3 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.

கொலோ. 3:4 கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

கொலோ. 3:5 ஆகவெ உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை ஒழுக்கக்கேடு கட்டுக்கடங்காத பாலுணர்வு தீய நாட்டம் சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

கொலோ. 3:6 இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவளின் சினத்தை வரவழைக்கின்றன.

கொலோ. 3:7 இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.

கொலோ. 3:8 ஆனால் இப்பொழுது நீங்கள் சினம் சீற்றம் தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள். பழிப்புரை வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது.

கொலோ. 3:9 ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு

கொலோ. 3:10 புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்.

கொலோ. 3:11 புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும் யூதர் என்றும் விருத்தசேதனம் பெற்றவர் என்றும் விருத்தசேதனம் பெறாதவர் என்றும் நாகரிகம் அற்றோர் என்றும் சீத்தியர் என்றும் அடிமை என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.

கொலோ. 3:12 நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைப பரிவு இரக்கம் நல்லெண்ணம் மனத்தாழ்மை கனிவு பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.

கொலோ. 3:13 ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

கொலோ. 3:14 இவையனைத்துக்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.

கொலோ. 3:15 கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக. இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.

கொலோ. 3:16 கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக. முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாடல்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

கொலோ. 3:17 எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

கொலோ. 3:18 திருமணமான பெண்களே உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்.

கொலோ. 3:19 திருமணமான ஆண்களே உங்கள் மனைவியிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள்.

கொலோ. 3:20 பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.

கொலோ. 3:21 பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

கொலோ. 3:22 அடிமைகளே இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வெரை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல் ஆண்டவருக்கு அஞ்சி முமழுமனத்தோடு வேலை செய்யுங்கள்.

கொலோ. 3:23 நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்.

கொலோ. 3:24 அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்.

கொலோ. 3:25 ஏனெனில் ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார்.


4. அதிகாரம்

கொலோ. 4:1 தலைவர்களே உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

கொலோ. 4:2 தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்.

கொலோ. 4:3 நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் உருவாக்கித் தருமாறு அவரிடம் எங்களுக்காகவும் வேண்டுங்கள். அப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நாங்கள் எடுத்துரைக்க முடியும். இம்மறை பொருளின் பொருட்டே நான் சிறைப்பட்டிருக்கிறேன்.

கொலோ. 4:4 நான் பேசவேண்டிய முறையில் பேசி இம்மறை பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள்.

கொலோ. 4:5 திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள். காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்.

கொலோ. 4:6 உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக. ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

கொலோ. 4:7 என்னைப்பற்றிய செய்திகளையெல்லாம் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் என் உடன்பணியாளர் நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.

கொலோ. 4:8 எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்கள ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.

கொலோ. 4:9 நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரர் ஒனேசிமுவையும் அவரோடு அனுப்பிவைக்கிறேன். அவர் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவர். அவர்கள் இங்கு நடப்பவை அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

கொலோ. 4:10 என் உடன்கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்க உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். இவருக்கு நீங்கள் செய்ய வேண்டிவைப்பற்றி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம். இவர் உங்களிடம் வந்தால் வரவேற்பு அளியுங்கள்.

கொலோ. 4:11 யுஸ்து என்னும் இயேசுவும் உங்களை வாழ்த்துகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே இறையாட்சிக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாயிருந்து வருகின்றார்கள்.

கொலோ. 4:12 கிறிஸ்து இயேசுவின் பணியாளரும் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவருமான எப்பப்பிரா உங்களை வாழ்த்துகிறார். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் நீங்கள் தேர்ச்சிபெற்றவர்களாயும் நிலைத்து நிற்பவர்களாயும் இருக்கவேண்டுமென இவர் எப்போதும் உங்களுக்காக இறைவனிடம் வருந்தி வேண்டி வருகிறார்.

கொலோ. 4:13 இவர் உங்களுக்காகவும் லவோதிக்கேயா எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.

கொலோ. 4:14 அன்பார்ந்த மருத்துவர் லு஡க்காவும் தேமாவும் உங்களை வாழ்த்துகின்றனர்.

கொலோ. 4:15 லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளுக்கும் நிம்பாவுக்கும் அச்சகோதரி வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.

கொலோ. 4:16 இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள்.

கொலோ. 4:17 ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேறி முடிக்கக் கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள்.

கொலோ. 4:18 பவுலாகிய நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன். சிறைப்பட்டிருக்கும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். இறையருள் உங்களோடிருப்பதாக.

by Swathi   on 24 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.