70 டன் எடை கொண்ட போர் தளவாடங்களையும், 150 வீரர்களையும் சுமந்து சென்று எந்த சிக்கலான இடத்திலும், தரை இறங்கும் திறன் பெற்ற, சி - 17 ரக போர் விமானம் நேற்று இந்திய விமானப் படையில், சேர்க்கப்பட்டது.
அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து பத்து, சி - 17 ரக விமானங்களை வாங்க இந்தியா சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் படி, முதல் தவணையாக, மூன்று விமானங்களை, அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த சி - 17 ரக விமானத்தை இந்திய விமானப்படைக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று, உத்திர பிரதேச மாநிலம், காசியாபாத் அருகே உள்ள, ஹிண்டன் விமான படை தளத்தில் நடந்தது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி கலந்து கொண்டு , சி - 17 ரக விமானத்தை, இந்திய விமான படைக்கு அர்பனித்தார். இதற்கு முன் 40 டன் எடை கொண்ட போர் தளவாடங்களை எடுத்து செல்லும், ரஷ்ய தயாரிப்பான, ஐ.எல்., - 76 ரக விமானம், இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|