LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் உரைகள்-உரையாசிரியர்கள்

திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண்மணி மருங்காபுரி ஜமீன்தாரிணி

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதித் தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார். அதுவரை திருக்குறளுக்கு உரை எழுதிய தருமர், மணக்குடையார், தாமத்தர், நச்சர் அல்லது நத்தர், பரிமேலழகர், பருதி, திருவனையர் அல்லது திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் இவர்களது வரிசையில், 85 ஆண்டுகளுக்கு முன்பு, எளிய வசன நடையில் அதன் உட்பொருள் மாறாமல் உரை எழுதிய முதல் பெண்மணி என்னும் மதிப்பையும் இவர் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரி. இது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டது. இத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர். இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்து, அந்தப் புலியைக் குத்திக் கொன்றதால், புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமையோடு அழைத்துவருகின்றனர். மக்கள் நலன், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது.

தமிழ்த் தொண்டு:

இவர் 1894-ல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அனைவருக்கும் எளிதாகப் புரியும் அளவுக்குக் கருத்தை விரித்து, குறிப்புகளை அவ்வப்போது துண்டுச் சீட்டில் எழுதி வைத்ததாகவும், அதையே பலரின் விருப்பம் காரணமாகத் திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூலாக வெளியிட்டுள்ளதாகவும் லட்சுமி அம்மணி முகப்புரையில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்நூலை இதனினும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் எழுதலாமென்று கல்விமான்கள் கருதலாம். ஆயினும் அதிக நூல் பயிற்சியும், கேள்விகளும் இல்லாத அடியேன்”, இந்நூலை எழுதியுள்ளதாக அடக்கத்தோடு கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள நூலில் அணிந்துரை வழங்கியவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இவர் எந்த அளவுக்கு அறிவுக் கூர்மை உள்ளவர் என்பதும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் அவருக்கிருந்த விரிந்த பார்வையும் புலப்படுகின்றன.

திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால், பொருட்பால் என இரு பால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார். காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். இவர் காலத்தில் தமிழுடன் வடமொழி இரண்டறக் கலந்திருந்ததால் உரை நூல் முழுதும் சமஸ்கிருதத்தின் தாக்கம் நிரம்பியுள்ளது.

அணிந்துரைக்காகப் பலருக்கும் புத்தகம் அனுப்பி, அறிஞர்கள் எழுதித் தந்ததற்குப் பிறகே இந்த உரை நூல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 4, 5 மாதங்கள் லட்சுமி அம்மணி இப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அறிவார்ந்த நட்பு:

செப்டம்பர் 1928-ல் தொடங்கி 1929-ல் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அப்போது வாழ்ந்த உ.வே.சா. நா.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை உமாமகேசுவரனார், திரு.வி.க. உள்ளிட்டவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருப்பதன் மூலம் அவர்களுடனான நட்பும் தொடர்பும் பலமாகவே நூலாசிரியருக்கு இருந்துள்ளது தெரிகிறது. நூல் தரமான தாளில் நேர்த்தியாக சென்னை - ராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. உறுதியான கட்டமைப்புடன் (பைண்டிங்) 500 பக்கங்களைக்கொண்ட நூலின் விலை மூன்று ரூபாய். முறையான நூல் காப்பு உரிமமும் இந்நூலுக்குப் பெறப்பட்டுள்ளது. உரை விளக்கம் முழுவதிலும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பக்க எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாலேயே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மொழிப் புலமையில் கொண்டிருந்த ஈடுபாடு அளவுக்கு நூலாசிரியர், பொதுப் பணிகளிலும் அக்கறை செலுத்தியுள்ளார். அப்போதே திருச்சி ஜில்லா போர்டுக்கு நியமன உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். இதுதவிர, மாவட்ட பாரதி சகோதர சங்கத்தின் தலைவராகவும் இருந்து இலக்கியப் பணி செய்துள்ளார். 2004-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி ரிஷிகேஷ் (இமயமலை) தமிழ்ச் சுரங்கம், டெல்லித் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய மொழி மாநாட்டில் நூலாசிரியர் லட்சுமி அம்மணியின் படத்தை வெள்ளையாம்பட்டு சுந்தரம் திறந்து வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். உ.வே.சாமிநாத அய்யர் நூலகத்தில் இருந்த, இந்த நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான செய்தியறிந்து இந்நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பழம் பெருமை வாய்ந்த திருக்குறள் தீபாலங்காரம் நூலைப் பற்றியும், நூலாசிரியரின் வள்ளுவர் நெறி குறித்தும் வெளி உலகத்திற்குப் போதிய அளவில் தெரியாமல் இருப்பது பெரும் குறைதான். தமிழக அரசு இந்த நூலை நாட்டுடைமையாக்கி எல்லாத் திசைகளுக்கும் லட்சுமி அம்மணியின் புகழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தமது ஆசை என அவரது வளர்ப்பு மகன் சிவசண்முக பூச்சய நாயக்கர் தெரிவித்துள்ளார்.

 

திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண்மணி மருங்காபுரி ஜமீன்தாரிணி லட்சுமி அம்மாள் அவர்களின் உரை:

https://t.ly/MD1fh

https://www.tamildigitallibrary.in/

தேடும் சொல்: திருக்குறள்_தீபலாங்காரம்.pdf

 

 

by Swathi   on 12 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.